ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday 27 August 2012

வேதாந்தம் படும் பாடு - பாகம் 1

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  அவர் அலுவலகத்தில் வேலை செய்வார். பொழுது போக்க சினிமா, டிவி என்று பார்த்துக் கொண்டிருப்பார். கோவிலுக்குக் கூட அதிகம் போகமாட்டார்.  திடீரென்று என்னிடம் ”நான்  இப்ப பக்கா ஆன்மீகவாதி ஆயிட்டேன் தெரியுமா?” என்றார். ”அப்படியா! ரொம்ப  சந்தோஷம்”, என்றேன்.  “நீ நம்பலை. இரு.” என்று சொல்லிவிட்டுப் போனார். ஒரு ஏழோ எட்டோ சான்றிதழ்களுடன் வந்தார்.



மனவளக் கலை, Art of Living துவங்கி எங்களூர் ஆன்ம நல அன்பர் சங்கம் வரை பல அமைப்புகள் நடத்திய வாசி யோகம், யோகாசனம், தியானம், தேவாரம், வேதாந்த வகுப்புகளில் கலந்து கொண்டமைக்கான சான்றிதழ்கள் அவை. சரிங்க ஆன்மீகம்னா என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க என்றேன்.  அதாம்பா இப்படி தியானம் பண்றது, சாமி கும்புடறது, வேதாந்தம் படிக்கிறது, நல்லபடியா இருக்கிறது இதுதான் ஆன்மீகம் என்றார்.

பாண்டுரங்கன்னு ஒரு சாமி இருக்காரே தெரியுமா என்றேன். எங்கே என்றார். கதையைச் சொல்லிவிட்டு, அம்மா அப்பாவ கவனிச்சுகிட்ருக்கேன் கொஞ்சம் காத்திருன்னு கடவுளக் காக்க வெச்ச அந்த மனுஷன் ஆன்மீகவாதியா இல்லையா? இம்புட்டு சர்டிபிக்கேட் வெச்சிருக்கீங்க... ஆன்மீகவாதி ஆயிட்டீங்க...  நீங்க சொல்லுங்க என்றேன்.

நீ திருந்தமாட்டே! ஒனக்கு கர்வம்!! அடுத்தவன் ஆன்மீகவாதின்னு ஒத்துக்க முடியலை. பொறாமை.... அதான் இப்படி வெதண்டாவாதம் பேசறே... கர்விக்கு என்ன கதி தெரியுமா? படித்தவன் பாவம் செய்தால் ஐயோன்னு போவான்... என்று வசைபாடினார். சிரிப்பை அடக்கிக் கொண்டேன். விஷயத்தை விட்டு விடலாம் என்றேன்.

அலுவலக விஷயங்கள், அரசியல் பக்கம் பேச்சை மாற்றி, காபி குடித்துவிட்டு அவரிடம் விடை பெற்றேன். (இது இன்னும் எம்புட்டு நாளுன்னு தெரியலை. கொஞ்ச நாள் கம்யூனிசம் தான்னு திரிஞ்சாரு. அப்புறம் ஓஷோ நெறைய விஷயம் சொல்லிருக்காருன்னு பேசினாரு. இப்ப தேவாரம், வேதாந்தம்னு கெளம்பிட்டாரு. ஆனாலும்  தண்ணிய மட்டும் இன்னும் விட்ட பாடில்லை என்று அவரது வீட்டுக்காரம்மாள் புலம்பியது தனிக்கதை.)

சரி போகட்டும் இதையாவது evolution என்று தேற்றிக் கொள்ளலாம். மற்றொரு நண்பர்.  தினமும் கோவிலுக்குப் போவார். தேவராம், திருவாசகம், தாயுமானவர் பாடல்கள், எல்லாம் மனப்பாடம். ஆங்கில இலக்கியம் தவிர சைவ சித்தாந்தத்திலும் பட்ட மேற்படிப்பு முடித்தவர். பல விஷயங்கள் குறித்து பேசுவோம். ஒருநாள்  திடீரென்று போன் செய்து உலகத்துல  எவன் நல்லவன் எவன் மோசமானவன்னே தெரியலப்பா என்றார்.

இதெல்லாம் ஜகஜமான விஷயம் தானேண்ணே என்றேன். இல்லப்பா!  நான் 8 வருஷமா வேதாந்தம் படிக்கிறேன். என்னய அவமானப் படுத்திப்புட்டான்  என்றார். அவன் ஆள மட்டும்  காட்டுண்ணேய்.... பிரிச்சு மேஞ்சுருவோம். இதுக்கு போயி  பொலம்பிகிட்டு என்றேன். விஷயம் இதுதான்.

அவர் மகள் படிக்கும் பள்ளியில்  இந்தியக் கலாச்சாரம் குறித்த பேச்சுப் போட்டி வைத்தார்களாம்.  அண்ணன் தன் ஆங்கிலப் புலமை, சைவ சித்தாந்தப் படிப்பு, வேதாந்த அறிவு இவற்றை எல்லாம் கொட்டிக் கலந்து கதம்பமாக ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்திருக்கிறார். குழந்தை போட்டியில் போய்ப் பேசியிருக்கிறது. கருத்துக்களும் சரி, மொழிநடையும் சரி 11 வயதுக்கு மீறியவை. பள்ளியில் ஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்குப் பரிசு கொடுத்து விட்டார்கள்.

என் அறிவு, ஆற்றல், புலமை எதையும் அந்தப் பயபுள்ளைக மதிக்கல! போயி நல்லா லெஃப்ட், ரைட், செண்டர்னு வாங்கு வாங்கு வாங்கிப்புட்டேன். டபுள் போஸ்ட் கிராஜுவேட்டு, 8 வருசமா வேதாந்தம் படிக்கிறேன்னு கேட்டதும் ஆடிப் போயிட்டாய்ங்க்ய... என்றார்.

சரிண்ணேய்! ஒரு வெவரம் சொல்லுங்க... இந்த வேதாந்தம்ங்கிறவரு விஸ்வ இந்து பரிஷத் தலைவரு தானண்ணே? என்றேன். டேய்...வேணாம்டா... இருக்குற கடுப்புக்கு நம்மபயன்னு கூட பாக்கமாட்டேன்... என்றார்.  சரி விடுங்க.. வேதாந்த்தம்னா  ”வருவதை எதிர்கொள்ளடா”ன்னு கண்ணதாசன் பாடுனாரே அந்த மாதிரி வெவரம் தானண்ணே என்றேன். அதுக்குன்னு நம்ம மருவாதிய விட்டுக் குடுக்கணுமா என்றார்.

போட்டில பரிசு வாங்குன புள்ள என்ன பேசிச்சுனு கவனிச்சீங்களா?

டேய்! அங்க வந்த பயலுகள்ள ஒருத்தனுக்கும் வேதாந்தம்னா என்னன்னே தெரியாதுடா என்றார்.

எப்புடி இப்புடிச் சொல்றீய?

ஏ! மொசப்புடிக்கிற நாய மூஞ்சப்பாத்தா தெரியாதா? 8 வருசம் வேதாந்த கிளாஸு போறேன். எம் மூஞ்சில ஒரு தெளிவு, அப்புறம் அதென்ன? ஆங் தேஜஸு இதெல்லாம் இருக்குல்ல. அதெல்லாம் அங்கன்னக்குள்ள ஒரு பயகிட்டயும் காணாம்டா, என்றார்.

ஆகக்கூடி வேதாந்தம் படிச்ச தெளிவு ஒங்களுக்கு மட்டுந்தேன் இருக்கு, மத்தவன் ஒரு பயபுள்ளக்கும் இல்லங்கிறீக? என்றதும் “ஊருல அம்புட்டு பேரும் தெளிவா இருக்கான், நான் மட்டும் கொளம்பிக் கெடக்குறேன்னு சொல்றியா? ஒன்னய மாறி ஆளுங்க முன்னேற்றத்த மொளையிலயே கிள்ளிப்புடுவீங்கடா. நான் வேதாந்தம் பேசுறது ஒனக்கு காமெடியா இருக்காக்கும். இன்னோண்ணு சொல்றேன் கேட்டுக்க.

எங்க குருஜி எம்புட்டு பெரிய மனுஷன்? அவரே அசந்து போனாரு என் இங்கிலீஷப் பாத்து. இந்தக் களுதப் பயலுகளுக்கு கற்பூர வாசன தெரியமாட்டேங்குது... ஆனா எடுத்துச் சொன்னாலும் கற்பூரத்த ஓத்துகிர மாட்றானுங்க..... எல்லாம் லோக்கல் பாலிடிக்ஸ் வெளையாடுதுப்பா... மாமன், மச்சான், ஒண்ணுவிட்ட அக்கா மயனுக்கு தங்கச்சி நாத்தனாளோட சின்ன மாமனாரு பேத்தி அப்புடின்னு nepotism  வேற என்றார்.  பேசிப் புண்ணீயமில்லை என்று விட்டுவிட்டேன்.

ஆக தான் வேதாந்தி, உலகம் அதை ஒப்புக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் நண்பர்கள் இருவருக்கும் இருக்கிறது. இவர்கள் போலப் பலருக்கும்... தன் வேதாந்த அறிவுக்கு அங்கீகாரம் தேடுவது என்பதை எல்லோரும் செய்கிறார்கள். அது எதிர்பார்த்த அளவிலும் முறையிலும் கிடைக்காத போது கோபம் வருகிறது. இது வேதாந்தத்தின்  அடிப்படைக்கே மாறானது.

வேதாந்தம் நிஜமாகவே இங்கே பேசப்படுகிறது...

No comments: