சநாதன தர்மத்தின்படி வாழ்வை அமைத்துக் கொண்ட அனைவரும் வாழ்த்தி வணங்கி வரவேற்க வெங்கட நாராயணா சாலையில் உள்ள சிருங்கேரி மடத்தின் கல்விச்சாலை மண்டபத்துக்கு ஏகினார். நகரத்தந்தை முதல் நல்லோர் பலர் வரவேற்பில் உரையாற்ற மடத்தின் தர்மாதிகாரி நம் மனத்தில் பாலோடு தேனும் வார்த்தார். ஆச்சார்யர் சென்னையிலே நவராத்ரி வரை இருந்தருள நம் சார்பில் கோரிக்கை வைத்தார். மழை பெய்கிறதோவென சுற்றுமுற்றும் பார்த்தேன். பிறகே புரிந்தது அது அடியாரின் மகிழ்ச்சி வெளிப்பாட்டில் வந்த கைதட்டல் ஓசை என்று.
மஹாஸந்நிதானம் அனுக்ரஹ பாஷணம் (அருட்சொற்பொழிவு) துவக்கிய போது மைக் மகிழ்ச்சியில் கூவியது. மஹானின் பேச்சை மக்களுக்கு பெருகிய ஒலியில் அளிக்கும் சேவைக்காக அதுவும் 17 ஆண்டுகள் காத்திருந்ததோ? அதன் மகிழ்ச்சிக்கூவல் நின்ற பிறகே மகான் பேசத் துவங்கினார்.
இடையிடையே கைதட்டல் வேண்டாம் என்றும் அது தமக்கு மிகவும் விக்ஷேபம் (குழப்பம்) ஆகிவிடும் என்றும் சொன்னார். இவருக்கு ஒரு விஷயம் விக்ஷேபம் என்றால் நாமெல்லாம் எங்கே போவது? யோசித்த போது புரிந்தது. இடையிடையே கைதட்டித் தொந்தரவு செய்யாதீர்கள் என்று கறாராகக் கண்டிக்காமல் தமக்கு விக்ஷேபம் என்று சொல்லியிருக்கிறார்.
பக்தி தமிழகத்திலே பிறந்தாள் என்று ப்ராதஸ்மரணீய ஸ்ரீஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த மஹா ஸ்வாமிகள் சொல்வார் என்று சொன்னார். பாவம் பக்திக்குத்தான் பிறந்த வீட்டில் எத்தனை சோதனைகள் என்று எண்ணாதிருக்க முடியவில்லை.
ஈஸ்வரனை ஒத்துக் கொண்டாலன்றி உலகில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்று சொன்னார். அப்போ நாஸ்திகக் கும்பல் ஒன்று இருக்கிறதே என்று எண்ணம் வந்தது. உடனே அதற்கும் பதில் வந்தது அவரிடத்திருந்து. சிலர் ஈஸ்வரனில்லாது பல விஷயங்களைத் தேடிப் பதில் சொல்லப் பார்க்கிறார்கள். அது வெற்றி பெறவில்லை, வெற்றி பெற வாய்ப்புமில்லை என்றார்.
குருவருளும் திருவருளும் இன்றி எவ்வளவு திறமை கொண்டு என்ன செய்தாலும் உரிய பலன் கிட்டாது என்றார். ஆக அடிப்படை அவர் எப்போதும் சொல்வதே. நானே செய்தேன் என்று எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதே என்பதே அது.
நிறைய நாள் இருப்பதால் நிறையப் பேசுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று சொல்லி சுருக்கமாக பாஷணத்தை நிறைவு செய்தார். குருவாக்கைத் தட்டாத சீடர்கள் அவர் உரையை நிறைவு செய்ததும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ குருப்யோ நம:
No comments:
Post a Comment