ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Wednesday 17 August 2011

சமச்சீர் கல்வி - கருணாநிதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!!

சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலோ அங்கே சமச்சீர் கல்விக்காக வைக்கப்படா வாதங்களிலோ தவறு காண முடியாது, தமிழக அரசு சமச்சீர் கல்வி குறித்த அமலாக்க நடைமுறைகளில் சற்றே சறுக்கி விட்டது. சென்னை உயர்நீதிமன்றத்  தீர்ப்பு 2011ஆம் கல்வியாண்டிலோ அதற்குப் பிறகோ சமச்சீர்கல்வியை அமல் படுத்தவேண்டும் என்பதே. தரக் குறைபாடுகளை எடுத்துச் சொல்லி 2012ல் அமல் படுத்துகிறோம் என்று சொல்லி இருக்கலாம்.

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு சமச்சீர் கல்வியைச் சமச்சீர் கல்வியாகவே 2012லிருந்து அமல் படுத்தியிருக்கலாம். தீர்ப்பை முழுதாகப் படித்துப் பார்க்காது செய்த அவசரச் செயலே மேல் முறையீடு என்பது பி.பி.ராவ் அவர்களின் வாதம். தமிழக அரசு சட்டத்துறையைச் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தை இது உணர்த்துகிறது. திமுக ஆதரவு அதிகாரிகளால் நிரம்பி வழிகிறதோ சட்டத்துறை என்று ஒரு ஐயம் எழுகிறது.

வசதியற்றவன் கல்வியில் பின்தங்கியிருந்தால் அவனை தனியார் கல்விக்கு ஈடாக தரம் உயர்த்துவது தானே அறிவுடைமை? பள்ளியில் தரமான கல்வியை பெற்றால் தான், உயர் கல்வி மற்றும் பல்வேறு துறைகளில், உயர் பதவிகளுக்கு செல்லும் போது, திறம்பட செயல்பட முடியும். சமச்சீர் கல்வியில் என்ன தரக்குறைவு என்று பார்த்தால், பாடங்களிடையே கருத்து இயைபு, தொடர்ச்சி இல்லை. வினாத்தாள் முறை, பயிற்சிகள் இப்போது போதிய அளவில் இல்லை.



சமச்சீர் கல்வி திட்டம் என்பது, பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாக உருவாக்கியிருக்க வேண்டும். கல்வித்துறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை தேசிய பாடக்குறிக்கோள் வடிவமைப்பு உருவாக்கியது.கல்வித்துறையில் சீர்திருத்துவதென்பது, அதன் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, தாழ்த்திச் சமப்படுத்துவதாக இருக்கக்கூடாது.  தற்போதுள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் அனைத்தும் தரமானவை என்று கூற முடியாது. குறிப்பாக, அறிவியல் பாடத்திட்டங்கள் தரமாக இல்லை.



சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, முந்தைய அரசு நியமித்த முத்துக்குமரன் குழு தெளிவாக எடுத்துரைத்துள்ளது. சமச்சீர் கல்வி என்பது, பல்வேறு வகை கல்வி முறைகளில் காணப்படும் குறைகள் களையப் பெற்று, நிறைகளை அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சீராக வழங்குவது என்று, அறிக்கையின் முன்னுரையிலேயே, முத்துக்குமரன் குழு குறிப்பிட்டுள்ளது. ஆனால், முந்தைய அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் என்பது, அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதற்குப் பதிலாக அனைவருக்கும் ஒரே பாடப் புத்தகங்கள் என்ற நிலையிலேயே நின்று விட்டது.சமச்சீர் கல்வி என்பது வெறும் பாடப்புத்தகத்தால் ஏற்படுவது அல்ல.

சமமான தரம் உருவாக்குவதும், செயல்படுத்துவதும் பாடத்திட்டம் மட்டுமல்லாது, பள்ளி வசதிகள், ஆசிரியர் எண்ணிக்கை, அவரது திறமை, பாடநூல்கள், தேர்வு முறைகள், பள்ளி நிர்வாகம், பள்ளிக் கல்வி நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பெரும் திட்டம் என்பதில் ஐயமில்லை.ஏனெனில், கலைத் திட்டம், நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் - மாணவர் விகிதம், இவற்றுள் ஏதாவது ஒன்று மட்டுமே சமமாக இருந்தால் மட்டும் சமச்சீர் கல்வியை உருவாக்க முடியாது, என்று முத்துக்குமரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் சமச்சீர் கல்வி பெற வேண்டுமெனில், முத்துக்குமரன் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, சமச்சீர் கல்வி வாரியம் அமைத்து, அதன் கீழ் தேவைப்படும் கல்வி குழுமங்களும் அமைத்து, அவை உயிர்ப்புடன் செயல்பட தீவிர நடவடிக்கை எடுத்தால் தான் முடியும்.ஒரே மாதிரி புத்தகத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அதுதான் சமச்சீர் கல்வி என்று கூறுவது  கேலிக்கூத்து. 

மாணவர்களின் கற்றல் திறனை அளவீடு செய்யும் திட்டங்கள், ஆசிரியர் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டங்கள் ஆகியவை, திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியில் இடம் பெறவில்லை. திட்டத்தை, படிப்படியாக, ஒவ்வொரு வகுப்பாக கொண்டு சென்றிருக்க வேண்டும். அவசரம், அவசரமாக பாடத்திட்டத்தை உருவாக்கி, ஒரே நேரத்தில் அமல்படுத்த முயன்றது தவறு.
மிக முக்கியமான கல்வி விஷயத்தில் எந்தவொரு முன்னேற்பாடும் செய்யாமல் நேரிடையாக செயல்பாடுகளை ஆரம்பிக்க எவ்விதம் முனைந்தனர் என்பதே புரியவில்லை.
 
"சமச்சீர் கல்வி தொடர்பாக 109 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, அப்போதைய அரசிடம் வழங்கப்பட்டது. நான் அளித்த அறிக்கையை பார்த்து அமல்படுத்தும் பொறுப்பை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமாரிடம் அப்போதைய அரசு அளித்தது. அவர், அவருடைய பொறுப்பை முழுமையாக செய்யவில்லை. பல பரிந்துரைகளை அரசு ஏற்கவே இல்லை,'' என பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தினமலருக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமெனில், முதலில் அனைத்துப் பள்ளிகளும் தரமானவையாக இருக்க வேண்டும் என்றும் தம் அறிக்கையில் கூறப்படுள்ளதாக அவர்சொல்லியிருக்கிறார்.
ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்று கோத்தாரி கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த கமிஷனின் அறிக்கை இதுவரை செயல்படுத்தப்படவில்லை.  அடிப்படை கட்டமைப்பு வசதிகள்,ஆசிரியர் பற்றாகுறை, தகுதிநிறைபெறாத ஆசிரியர்கள், பணி ஆர்வமில்லாதோர் இவர்களை வைத்துக்கொண்டு எந்தொரு நல்ல மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. 

மெட்ரிக் கல்விமுறையில் அறிவியல்பாடமானது இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் என நான்கு பாடமாக இருந்தது. நான்கு ஆசிரியர்கள் கற்பித்தனர். சமச்சீர் கல்வியில் அவற்றை ஒன்றாக இணைத்து ஒரே பாடமாக்கி, ஒரே ஆசிரியரே நடத்தும்படியாக அமைத்திருக்கின்றனர். மேலும் சமச்சீர் கல்வி முறையில், கம்ப்யூட்டர் குறித்த பாடம் ஏட்டளவில் மட்டுமே உள்ளதே தவிர, மாணவர்கள் கண்ணில் கம்ப்யூட்டரைக்க காட்டுவதில்லை. ஆனால் அவற்றை மெட்ரிக் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி செயல் விளக்க முறையிலும் கற்றுத் தரப்படுகிறது.



தனியார் பள்ளிகளில் கற்கும் குழந்தைகள் அனைவரும் முன் பருவக் கல்வி (LKG, UKG) கற்றுதான் பள்ளிக்கு வருகின்றனர். முதல் வகுப்பிலேயே தனியார் பள்ளி குழந்தைகளுக்கும், அரசு பள்ளி குழந்தைகளுக்கும் சமமின்மை உருவாக்கி விடுகிறது. இதனைப் போக்க அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். கல்வி சிறு வயதிலிருந்தே மாணவர்களின் சிந்தனைத் திறன், பகுத்தறிவு, விமர்சனப் பார்வை, படைப்புத் திறன் ஆகியவற்றை வளர்ப்பதாக இருக்க வேண்டும். NCF, 2005ல் கூறியுள்ளவாறு அனைத்துப் பாடங்களும் மனித உரிமைக் கண்ணோட்டத்துடனும், சமூக ஈடுபாட்டை உருவாக்குவதாகவும் அமைய வேண்டும்.


கருணாநிதி எழுதிய பாட(ல்)ங்கள், கருணாநிதி பற்றி எழுதிய பாடங்கள், கருணாநிதிக்காக எழுதிய பாடங்கள் ஆகியவற்றை "தேர்வுக்கு வராது" என்ற ஒரு நிர்வாக உத்தரவு மூலம் செல்லாக்காசாக ஆக்கிவிட்டு மற்ற பாடங்களுக்கு அவ்வப்போது திருத்தங்களை அளித்துக் குழப்பங்களைக் குறைக்கலாம்.

அரசு சார்பிலோ அதிமுக சார்பிலோ சமச்சீர் கல்வி குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் இல்லவே இல்லை. தேர்தலைச் சந்திக்கும் போது மக்களையும் சந்தித்தால் போதாது. இது போன்ற விஷயங்களில் வீடு வீடாகவும், வீதிமுனைகளுக்கும்  சென்று உண்மைகளை எடுத்துரைக்கும் பணி செய்வது மிக அவசியமாகிறது. இல்லாத பெருமைகளை இட்டுக்கட்டிச் சொல்லும் பணியை திமுகவும் அவர்களின் ஆதரவு ஊடகங்களும் வரிந்து கட்டிச் செய்யும் போது, உண்மையை விளக்கும் பணியைச் செய்ய ஏன் மெத்தனம் காட்டுகிறது அதிமுக?


தேர்தலில் மண்ணோடு மண்ணாக வீழ்ந்து போனாலும் திமுகவை எளிதில் புறந்தள்ள முடியாது. அவர்கள் கையில் பலம் பொருந்திய ஊடகங்கள் உள்ளன. மக்களின் கருத்தை திசை திருப்புவதில் கருணாநிதி கெட்டிக்காரர். ஊசிமுனை கிடைத்தாலும் அதில் ஒட்டகத்தை நுழைப்பதில் சமர்த்தர். புளுகு மூட்டைகளை உண்மை போல அடுக்கி உணர்வுப் பூர்வமாக மக்களை கவர்வதில் அவர் நிபுணர். திரைப்படக் கதாசிரியராகத் துவங்கி திமுக தலைவராக இன்று வரை அவர் சிறப்பாகச் செய்வது அது ஒன்றே.

தற்போதைய உச்சநீதிமன்றத்தீர்ப்பு கருணாநிதியைக் கடுமையாகக் கண்டித்திருப்பதை மறைத்துவிடப் பார்ப்பதே இதற்குச் சாட்சி. உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு குட்டு வைத்திருக்கிறது. அது தவறாக இந்த விஷயத்தைக் கையாண்டமைக்காக. ஆனால் "முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு, சுயவிளம்பரம் செய்துகொண்டு, தன்னுடைய கொள்கை, வழிமுறைகளை தேவையற்ற முறையில் உயர்த்திக்காட்டி இளம் சிறார்களையும் இளைஞர்களையும் தேவையற்ற முறையில் வசப்படுத்த முயன்றிருக்கிறார். மொத்தமாக சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதை விட, இதுபோன்ற ஆட்சேபிக்கத்தக்க விஷயங்களை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்தலாம்" (Undoubtedly, there had been a few instances of portraying the personality by the leader of political party [M. Karunanidhi] earlier in power, i.e. personal glorification, self publicity and promotion of his own cult and philosophy, which could build his political image and influence the young students, particularly in the books of primary classes. Such objectionable material, if any, could be deleted, rather than putting the operation of the Act 2010 in abeyance for indefinite period.) என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.  இது அவராலும் அவரை அண்டிய ஊடகங்களாலும் வசதியாக மறைக்கப்படுகிறது.


மதுரையில், திருச்சியில் கோவையில் என்று கடந்த ஆட்சியில் அதிமுக நடத்திய கூட்டங்கள் அம்மாவின்  திட்டமிடல் மற்றும் துணிவுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்தன. ஆனால் அவர் ஆட்சியைப் பிடித்த பிறகு கட்சியின் சார்பில் ஒரு பெரிய பொதுக்  கூட்டம் கூட நடக்கவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர் முதலமைச்சராகிவிட்டார். கட்சிப்பணிகளை முழுமையாக கவனிக்க முன் போல நேரமிராது என்பது உண்மைதான்.

கட்சிக் கட்டமைப்பு எங்கே போனது? அவைத்தலைவர் என்ன செய்கிறார்? இளைஞர் இளம்பெண்கள் பாசறை என்ன செய்கிறது? இலக்கிய அணி எங்கே? வழக்கறிஞர் அணி எங்கே? இந்நேரம் இவர்கள் பிரச்சாரத்தில் இறங்கித் திமுகவின் பொய் வாதங்களை, புளுகுமூட்டைகளை, மக்கள் நல முகமூடிகளில் வரும் பித்தலாட்டங்களைப் பிய்த்தெறிந்திருக்க வேண்டாமா? ஜெயா டிவியில் ரபி பெர்னார்ட் உட்கார்ந்து விட்டம் பார்த்து யோசித்து யோசித்துக் கேட்கும் கேள்விகளுக்கு வரிந்து கட்டிப் பதிலளிப்பது மட்டுமே திமுக அணியினரின் பொய்ப் பிரச்சாரத்துக்குத் தகுந்த பதிலடி ஆகாது.

Periodic updates to stake holders என்று நிர்வாகவியலில் சொல்வார்கள். ஒரு செயல்பாட்டில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் குறிப்பிட்ட கால கட்டங்களில் செயல்பாட்டின் நிலை பற்றிய அறிக்கை அளிக்கப்படும். அது போல சமச்சீர் கல்வியில்அரசின் நிலைப்பாடு, உணமை நிலவரம், அரசின் குறிக்கோள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்லத் தவறுவது மிகப் பெரிய தவறாக முடியும் வாய்ப்பிருக்கிறது. திறமைசாலிகள் பலர் இருந்தும், உண்மை உடனிருந்தும், வாயடைத்துப் போய் வாளாவிருப்பது போலத் தோற்றமளிப்பது ஏன்?