ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Tuesday 19 July 2011

மீண்டும் மும்பையில் குண்டு வெடிப்பு!

மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடித்துள்ளது. மும்பா தேவி கோவிலுக்கருகே ஒரு குண்டு வெடித்துள்ளது. அனுமார் கோவிலுக்கருகே ஒரு குண்டு வெடித்துள்ளது. ஓபெரா ஹவுஸ் எனப்படும் இடத்தருகே ஒரு குண்டு வெடித்துள்ளது. 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியகியுள்ளனர். 120 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர்.மும்பாதேவி கோவிலுக்கருகே உள்ள ஜவேரி பஜார் தங்க வைர நகைக்கடைகள் நிறைந்த பகுதி. மதக் கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டுப் பார்த்தாலும் பெருவணிகர் பகுதி இது.


மீண்டும் இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்த்தத் துடிக்கும் தீயசக்திகளின் சதி இது. இந்திய வளர்ச்சியின் ஆணிவேரை அசைத்துப் பார்க்க எத்தனிக்கும் எத்தர்களின் செயல். தங்க வைர நகைக்கடைகளை குஜராத்திகள் அதிகம் வைத்திருப்பதாலேயே (இயல்பிலேயே தீவிரவாதத்தை எதிர்த்துக் கோபப்படும்) நரேந்திர மோடி பொங்கியிருக்கிறார். வேறு பெரும் சதிக்கான முன்னோட்டம் இது என்று கூறியுள்ளார். மோடி சொன்னார் என்பதற்காக விட்டுவிடாமல் இந்தக் கோணத்தில் கண்டிப்பாக உறங்கிக்கொண்டிருக்கும் நம் உளவு அமைப்புகளையும், காவல் கட்டமைப்பையும் எழுப்பி விசாரிக்க உத்தரவிடவேண்டும்.

தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் உள்துறை அமைச்சர் சீனாத்தானா. அவர்கள் திட்டமிட்டுச் சதி செய்து அதை நிறைவேற்றும் வரை நம் உளவு அமைப்புகளும் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் இவரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது 176000 கோடி ரூபாய்க்கும் அதிகப் பெறுமானமுள்ள கேள்வி. பாபா ராம்தேவ் உண்ணாவிரதமிருந்த இடத்துக்கு ஆயுதம் தாங்கிய காவலர்களை அனுப்பிக் கண்ணீர்ப்புகை வீசி, கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தத் தெரிந்தவர்களுக்கும் அவர்களுக்குத் 'தக்க தகவல்' தந்த உளவுத்துறைக்கும் தீவிரவாதிகள் வருவதும் குண்டு வைப்பதும் தெரியாமல் போனது விந்தையிலும் விந்தை தான்.

பாபா ராம்தேவ் பந்தலில் நடந்த தாக்குதலில் காயப்பட்டது குப்பனும் சுப்பனுமான ஓட்டுப்போடும் எந்திரம் என்று பொதுவாக அறியப்படுபவர்களும், தேர்தலுக்குத் தேர்தல் ஆம் ஆத்மி, காமன் மேன் என்று கொஞ்சப்படுபவர்களுமான நம்மில் ஒருவர் தான். காக்க வேண்டிய அரசாங்கமே அடித்து உதைப்பது கண்டு அழக்கூடத் தோன்றாது ஆசுபத்திரியில் படுத்திருப்பவனைப் போய்ப்பார்க்ககூட நேரமிருக்காது இந்த ஓட்டு வாங்கும் எந்திரங்களுக்கு. இதைப் பேசினால் பாபா ராம்தேவை ஆதரிக்கிறாய் நீ இந்துத்வா ஆள் என்று ஒரு கும்பல் குதிக்கும். இந்துத்வா என்பது இஸ்ரேலின் கைவேலை, ஆகவே நீ ஒரு மொசாத் உளவாளி என்று ஒரு கோஷ்டி கூப்பாடு போடும்.

எங்கே யார் தாக்கினாலும் உயிர் விடுவதும் ஊனப்படுவதும் மத்தியில் ஆளும் காங்கிரசுக் கட்சி பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாகத் தேர்தலின் போது  வாக்குறுதி தந்த ஆம் ஆத்மிதான். அவனைப் பாதுகாக்கவே தாங்கள் என்பதை மறந்துவிட்டு பதவி, பட்டம், பகட்டு என்று படாடோபமாக அனுபவித்துக் கொண்டிருப்பது ஆள்வோர்க்கு நல்லதல்ல. தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தும், அடிபட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும், மாண்டவர்களுக்கு மலர்வளையம் வைத்தும் விட்டு வீட்டுக்குப் போவது தவிர வேறென்ன செய்வது என்றே இவர்களுக்குத் தெரிவதில்லை.

உளவு அமைப்புகளிடமிருந்து எந்த எச்சரிக்கையும் வரவில்லை என்கிறார் சீனாத்தானா. ஆனாலும் உளவுத்துறை கோட்டை விட்டது என்று சொல்ல முடியாது என்கிறார். நடக்கவுள்ள நாசவேலையைக் கண்டறிந்து சொல்லத்தவறியது கோட்டைவிட்டதாக ஆகாதாம். உளவுத்துறை தன் வேலையைச் செய்யத் தவறியதற்குப் பெயர் வேறென்னவாம்?  26/11/08ல் கசாப்பும் கூட்டாளிகளும் கண்ணில் கண்ட இடமெல்லாம் சுட்டு அவர்களிடம் சிக்கிய பலர் செத்து மடிந்த போது உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் லாயக்கில்லை என்று குற்றம் சாட்டி நிதித்துறையிலிருந்து உள்துறைக்கு சீனாத்தானா மாற்றப்பட்டார்.

சாதனைகள் என்று விரல்களை மடக்குங்கள் என்று சொன்னால் கை விரல்களை நீட்டி நிமிர்த்தி மட்டுமே அவரால் வைத்துக் கொள்ள முடியும். தமிழக மீனவர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்ட போது கண்ணீர் கூட வடிக்காத கல்நெஞ்சக்காரர் சீனாத்தானா. இறந்த மீனவர்களில் ஒருவர் வீட்டுக்காவது இவர் போய் ஆறுதல் மட்டுமாவது சொல்லியிருப்பாரா? சொந்த மாநில மக்களின் துயரத்தையே துடைக்கக் கைவராத இவரை நம்பி மொத்த உள்நாட்டுப் பாதுகாப்பையும் ஒப்படைத்தது அறிவுக்கொவ்வாத செயல்.

இரண்டாண்டுகளுக்கு முன் உள்துறைக்குப் பொறுப்பேற்ற சீனாத்தானா உருப்படியாக எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.  உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உரிய நடவைக்கைகளான காவல் கட்டமைப்பைச் சீர்செய்வது, காவலர்களுக்கு நவீன தாக்குதல் முறைகளில் பயிற்சி அளிப்பது, நவீன ஆயுதங்கள் அளிப்பது, அவர்களுக்கு பணிப்பளு அதிகரிக்காது செய்ய ஆவன செய்வது போன்ற விஷயங்களில் விரலாவது அசைத்திருப்பாரா இந்த மெத்தப் படித்த மேதாவி?

99% தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுத்துவிட்டோம். 1% மட்டுமே நடந்துள்ளது என்று பிரதமராக விழையும் இராகுல காந்தியார் கூறியுள்ளார். 99% தடுக்கப்பட்டது என்ற புள்ளிவிவரம் எங்கிருந்து பெறப்பட்டது? இந்தத் தருணத்தில்  அதைச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பவனிடம் போய், "சந்தோசப் பட்டுக்கொள். நீ செத்துபோகாமல் உயிருடன் இருக்கிறாயே! கை, கால் போனால் போகிறது" என்பது போல் அல்லவா இது இருக்கிறது! ஆறுதல் கூறாவிட்டாலும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சி விளையாடாமல் இருப்பது இராகுல காந்தியாருக்கும் அவரது கட்சிக்கும் நல்லது.

மும்பை மட்டுமே ஏன் தாக்குதலுக்குள்ளாகிறது என்ற கேள்விக்கு நான் பேசிய வரையில் சிலர் கூறும் பதில் "அப்போ எல்லா ஊருலயும் குண்டு வெடிக்கணுமா? வச்சிட்டான் வெடிச்சிருச்சு.... போவியா" என்ற குடிபோதைப் பேச்சுதான். தன் வீட்டில் இழவு விழுந்தால் தானே வலி தெரியும் இந்தப் பதர்களுக்கு. பக்கத்து வீட்டில் மீண்டும் மீண்டும் தீப்பிடித்தால் தன் வீடும் பற்றிக் கொள்ள வாய்ப்புண்டே என்ற எச்சரிக்கை உணர்வின்றி "அவன் வீடுதானே...... அவன் பாத்துக்குவான்" என்று டிவி பார்த்துக் கொண்டு பொழுது போக்கும் குணம். தன் வீட்டில் தீப்பிடித்தால் மட்டுமே அடித்துக் கொண்டு அழும் இவர்களால் நாட்டுக்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே பயனில்லை.

எத்தனை மனிதர்கள் மாண்டார்கள்? அவர்கள் குடும்பங்களின் கதி என்ன? மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் எத்தனை பேர் பிழைப்பார்கள்? பிழைத்தாலும் அவர்களால் பணி செய்ய முடியுமா? அவர்கள் குடும்பம் பிழைப்புக்கு என்ன செய்யும்? அரசு எந்திரம் இவர்களை நிச்சயம் 15 நாட்களில் மறந்துவிடும்.

தீவிரவாதிகளைத் தூக்கில் போடுவதற்கு மீனமேஷம் பார்க்கும் அரசு வீட்டுக்குப் போகவேண்டும். குற்றம் புரிந்தவனுக்கு தவறுகளை எண்ணிப்பார்த்துத் திருந்த வகைசெய்யும் இடமே சிறைச்சாலை. அங்கே அவனுக்குப் பொரித்த கோழியும், வறுத்த ஆடும் உண்ணக் கொடுத்தால் தின்று தினவெடுத்து அடுத்து என்ன செய்யலாம் என்று தான் அலைவான். சிறைவாழ்க்கை கேவலமானது என்ற எண்ணம் போய் வெளியே இருப்பதை விட உள்ளே வசதி அதிகம் என்றால் குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை. தன் மக்கள் போவார்கள் என்ற முன்னெச்சரிக்கையில் கருணாநிதி செய்து வைத்த இந்தப் பாதகமும் ஒழிக்கப்படவேண்டும். தீவிரவாதிகள், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என்றால் அவர்களை சிறையில் வைத்து கறியும் சோறும் ஊட்டி வளர்ப்பது என்ற கருணாநிதித்தனம் என்று ஒழியும் என்பதே இப்போது நம்முன் இருக்கும் அவர் குடும்ப சொத்து மதிப்பு அளாவிலான கேள்வி.

நடந்த பாதகம் 100% உளவுத்துறையும் காவல் துறையும் கோட்டை விட்டதனால் வந்த வினையே! இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது மத்திய மாநில அரசுகள். தேசப் பாதுகாப்புக்குக் குந்தகம் என்று தெரிந்தும் சீனாவின் ஹுயவேய் நிறுவனத்தை மறைமுகமகாக அனுமதித்த ஆ.ராசாவையும் தயாநிதி மாறனையும் பொறுத்துக் கொள்வது கூட்டணிக் கட்டாயம் என்று கூச்சமில்லாது சொல்லும் பிரதமரை வைத்துக் கொண்டு நாக்கைக் கூட நிம்மதியாக வழிக்க முடியாது. இந்த அரசு வீட்டுக்கு போகவேண்டும்.

1 comment:

hayyram said...

அம்பி, சுகமா? நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களோடு உரையாடுகிறேன். நெஞ்சு பொறுக்குதில்லாமல் நான் கூட இப்படி எழுதினேன் பாருங்கள்

http://hayyram.blogspot.com/2011/07/blog-post_14.html