ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday 21 October 2021

Fab India நிறுவனம் சமீப காலங்களில் சர்ச்சைக்கு உள்ளாகிறது. ஏன்?

இந்த  Fab India நிறுவனம் 1960ல் தொடங்கப்பட்டது. ஜான் பிஸ்ஸெல் என்ற அமெரிக்கர் தொடங்கினார். முதலீடாக 20000 அமெரிக்க டாலர்களை இறக்கினார். இன்றைய டாலர் மதிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் அமெரிக்க டாலர்கள். ஏது காசு என்ற கேள்விக்கு பாட்டி உயில் எழுதி வைத்தார். அவர் இறந்து போனதும் வந்த பணம் என்று சொன்னார்.

Ford Foundation ஜான் பிஸ்ஸெலை 1958ல் தத்தெடுத்துக் கொண்டது. ஆலோசகர் என்று இந்தியாவுக்கு வந்தார். இரண்டாண்டுகள் நிலைமையை உற்று நோக்கினார். 1960ல் இந்திய கைவினைப் பொருட்கள், கைத்தறி உள்ளிட்டவற்றை சர்வதேச சந்தையில் விற்றுத் தருகிறேன் என்று ஆரம்பித்தார். வீட்டின் ஒரு அறையில் அலுவலகம், மற்றொரு அறை குடோன் என்று வைத்துக் கொண்டார். 10 ஆண்டுகள் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் என்று சுற்றினார். கைத்தறி நெசவாளர்கள், கைவினைஞர்கள் என்று பலரிடமும் பேசி ஒப்பந்தம் போட்டு அவர்கள் விற்கும் விலையை விட கொஞ்சம் அதிகம் கொடுத்தார்.


அமெரிக்காவில் பெரிய கடைகளைப் பிடிக்காமல் சின்னக் கடைகள், அண்ணாச்சி கடை போன்ற கிராம, சிறு நகரக் கடைகளில் பொருட்களை விற்றார். 1964ல் லண்டனைச் சேர்ந்த டெரென்ஸ் கோன்ரன் என்ற பிரித்தானியருடன் நட்பு பாராட்டி வியாபாரம் பேசினார். அவருடைய Habitat என்ற நிறுவனத்துக்கு சால்வைகள், தரை விரிப்புகள், போர்வைகள், திரைச்சீலைகள், பொம்மைகள், பரிசுப் பொருட்கள் என்று வேலைப்பாடுகள் நிறைந்த கைத்தறி, கைவினைப் பொருட்களை விற்றார்.


ஜான் பிஸ்ஸெலுக்கு உள்நாட்டுத் தரகராகத் தொடங்கி தனியாக பொருட்கள் விற்கும் கடை தொடங்கிய கேரா என்பவர் 1965ல் 20 லட்ச ரூபாய்க்கு வியாபாரம் செய்திருந்தார். 1976 வரை ஓஹோவென்று ஓடிய வியாபாரத்தில் இவர்கள் சொன்னதே கணக்கு, வைத்ததே விலை, கொண்டதே லாபம்.


1975-76ல் ரிசர்வ் வங்கி வெளிநாட்டினர் நடத்தும் வியாபாரங்களில் 40% பங்குகளுக்கு மேல் அவர்கள் வைத்துக் கொள்ளக்கூடாது என்று சட்டம் போட்டது. உடனடியாக கேராவுக்கும், இன்னபிற உள்ளூர்த் தரகர்களுக்கும் பங்கு கொடுத்து, ஒரு லாப நோக்கற்ற நிறுவனம் தொடங்கி அதில் கைவினைஞர்கள், நெசவாளர்கள் உள்ளிட்டவர்களைச் சேர்த்து அந்த நிறுவனத்தின் பேரில் உள்ள பங்குகளுக்கு அவர்கள் உரிமையாளர்கள் என்று அறிவித்தார் ஜான். அந்த லாப நோக்கற்ற நிறுவனத்தை நிர்வகித்தது ஜானுடைய உறவினர்கள்.


குடியிருப்பு வீட்டில் கடை நடத்தினால் குற்றம் என்று எமர்ஜென்சி காலத்தில் சட்டம் வந்தது. உடனடியாக தில்லி கான்மார்க்கெட் அருகில் உள்ள Golf links என்ற பகுதியில் ஒரு இடத்தைப் பிடித்து அங்கே கடை திறந்தார் ஜான். அதுவே Fab Indiaவின் முதல் கடை. பிறகு பல்வேறு கிளைகள் திறந்தார். ஆனால் வாடிக்கையாளர்கள் என்று பார்த்தால் மிட்டா மிராசுகளும், அரசு உயரதிகாரிகளும் வசதி மிக்கவர்களுமே இருந்தனர். ஏனென்றால் Fab India விற்ற விலை அவர்களுக்கே கட்டுபடியானது. உள்ளூர்ப் பொருளை வெள்ளைக்காரனிடம் வாங்கிப் பெருமைப்படும் ஆட்கள் அங்கே குழுமினர்.


காதி ஏழைகளுக்கான கடை, Fab India வசதிபடைத்தவர்களின் காதி என்பதே அக்காலத்தில் பேச்சாக இருந்தது. 1988ல் ஜானின் மகன் வில்லியம் படிப்பு முடித்துவிட்டு இந்தியா வந்தார். வியாபாரத்தை சிறு நகரங்களில் மேலும் விஸ்தரித்தார். ஆனால் 1992ல் Habitat நிறுவனத்தை IKEA வாங்கியதில் இவர் ஐரோப்பிய சந்தையில் பெரும்பகுதியை இழந்தார். IKEA இந்தியாவில் ஆள் வைத்து நேரடிக் கொள்முதல் செய்தது. 1998ல் ஜான் மறைந்த பிறகு வில்லியம் நிர்வாகத்தில் Fab India 111 கிளைகளை இந்தியா முழுவதும் திறந்தது.


துணிகள், கைவினைப் பொருட்கள் என்று இருந்த Fab India டிசைனர் சரக்குகள் என்று கைத்தறி, கைவினைப் பொருட்களைத் தாண்டி விற்க ஆரம்பித்தது. டிசைனர் நகை, டிசைனர் துணி, டிசைனர் உடை, டிசைனர் நோட்டுப் புத்தகம் என்று விற்றார் வில்லியம். கைவினைஞர்களைக் காதி நிறுவனத்தில் விற்றுக் கொள்ளச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். சீனப் பொருட்கள் லாபம் பெரியதாகத் தந்தது.


2008ல் 200 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய Fab India, 2014ல் FABELS என்ற பெயரில் மேற்கத்திய ஆடைகளை இந்தியாவில் விற்கத் தொடங்கியது. இவ்வளவு பெரிய இந்தியச் சந்தையில் வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு மற்ற நாடுகளில் விற்பது வியாபாரத் தந்திரமே அல்ல என்றார் வில்லியம்.


ஆனாலும் இந்தியக் கைவினைக் கலைஞர்களை நாங்கள் தான் பாதுகாக்கிறோம் என்று வலியுறுத்தியது Fab India. அகில இந்திய கைவினைஞர் நலச் சங்கம் ஒன்றை தில்லியின் பிரபல டிசைனர்களுடன் சேர்ந்து ஆரம்பித்து 81000 உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது Fab India.


2015ல் கோவாவில் உள்ள Fab India கடையில் துணி போட்டுப் பார்க்கும் அறையில் காமிரா இருந்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி புகாரளித்தார். வில்லியம் உள்ளிட்ட த்லைமை நிர்வாகப் பொறுப்பில் இருந்த பலரும் முன் ஜாமீன் பெற்றார்கள்.


தற்போது தீபாவளி என்பதை ஜஸ்ன் ஏ ரிவாஸ் என்று இந்திய மொழி அல்லாத ஒன்றில் மொழிபெயர்த்து விளம்பரம் செய்துள்ளது Fab India. பலரும் கண்டனம் தெரிவித்த பிறகு விளம்பரத்தைத் தூக்கிவிட்டது.


இந்நிறுவனம் நம் கைவினைப் பொருட்களை விற்று உலகம் முழுக்கக் கொண்டு சென்ற போதும் கைவினைஞர்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கு ஏதும் பெரிய பங்களிப்பெல்லாம் செய்யவில்லை. தற்போது சீனாவோடு போட்டி போடும் விலையில் கைவினைஞர்களை விற்கச் சொல்கிறது.


இந்நிறுவனத்திடம் வியாபாரம் செய்வதால் அமெரிக்கக் குடும்பம் ஒன்றுக்கு லாபமும் Ford Foundationக்கு பங்குப் பணமும் கிடைக்கவே வழி செய்வதாக ஆகும். நம்மூர் ஆட்களிடமே வாங்குவோம். உள்ளூர் மக்களை ஊக்குவிப்போம்.

No comments: