ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday, 31 December 2018

இரண்டு புள்ளி பூஜ்ஜியம் - ஒரு பார்வை

கதை என்ன என்றால் பெரிதாக ஏதுமில்லை. இந்தியன், அந்நியன் உள்ளிட்ட சங்கர் படங்களின் அடிப்படை.  தான் விரும்பும் நேசிக்கும் ஒரு விஷயத்தை சமூகம் மதிக்காது போக கோபத்தில் வன்முறை கொண்டு தன் நியாயத்தை நிறுவ முற்படும் போராளியின் கதை. இதிலே கொஞ்சம் ஆவி விஷயங்களுக்கு ஆரா, மைக்ரோ ஃபோடான் என்று அறிவியல் சார்ந்த பெயர்களைக் கொடுத்துக் கதை விட்டிருக்கிறார்கள்.

சென்னையில் (மட்டும்) திடீர் திடீரென்று செல்ஃபோன்கள் பறந்து காணாமல் போகின்றன. மக்கள் கூட்டம் கூட்டமாக காவல்துறையில் புகார் தருகிறார்கள்.  மந்திரி செல்ஃபோனும் பறந்து காணாமல் போகிறது. ஆனால் இது எல்லாம் சென்னையில் மட்டுமே நடக்கிறது. ஆந்திரா எல்லை என்ற போர்டைத் தாண்டி எதுவும் இல்லை. விழுப்புரத்துக்குத் தெற்கேயும் ஒன்றுமில்லை. செல்ஃபோன் கதிரியக்கமுமா என்று கேட்கலாம். பதில்?

அரசு, முந்தைய எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவை உருவாக்கிய டாக்டர் வசீகரன் (ரஜினி) உள்ளிட்ட பல விஞ்ஞானிகளை அழைத்து விவரம் கேட்கிறது. (அவர் தன் அழகிய ரோபோ உதவியாளினி நிலாவுடன் (எமி ஜாக்சன்) மீட்டிங்கிற்கு வருகிறார்). முந்தைய எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவை வில்லனாக்கி சிட்டி கையாலே மாண்ட வில்லன் விஞ்ஞானியின் மகன் எதோ குடும்ப பிசினஸ் போல அப்பா செத்ததும் அதே அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் சீனியர் டைரக்டர் ஆகிறார் என்பது கருணாநிதி குடும்பம் திமுக தலைமைக்கு வருவது போலவே இருக்கிறது. அதிலும் வசீகரன் ஐஎஸ்ஆர்ஓ டேட்டா, நாசா ரிப்போர்ட் என்றெல்லாம் பேசி சிட்டியை மீண்டும் கொண்டு வர உத்தேசிக்கிறார். வில்லன் விஞ்ஞானியின் மகன் விஞ்ஞானி சிட்டியால் பிரச்சினை வரும் என்று சொல்லி சிக்கல் செய்கிறார். அப்பா சாவுக்கு பழி வாங்குவேன் என்கிறார். உள்துறை மந்திரியும் சிட்டியை மீண்டும் கொண்டுவர மறுக்கிறார்.

அந்நியன் படத்தில் வரும் கருட புராண தண்டனைகள் போலவே இந்தப் படத்திலும் குரூரமாக சிலர் இறக்கிறார்கள். ஆனால் செல்ஃபோன் மூலமாக மட்டுமே. வேறு வஸ்துக்கள் படத்தில் கொலைபாதகம் செய்வதில்லை. மந்திரி உத்தரவுப்படி ராணுவம் வருகிறது. ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை. தொலைபேசித்துறை மந்திரியும் கொடூரமாக இறந்தவுடன் உள்துறை மந்திரி சிட்டியை உயிர்பிக்க உத்தரவு தருகிறார். இல்லை, இல்லை.... வசீகரனிடம் கெஞ்சிக்கூத்தாடி தாஜா செய்கிறார்.  சிட்டி ரோபோ மீண்டும் வருகிறது. சம்பந்தப்பட்ட ஃபோன் கூட்டத்தோடு சண்டை போடுகிறது.

இந்த செல்ஃபோன் பறவை சிட்டியுடனும் ராணுவத்துடனும் சண்டையிடும் கட்டங்களில் காட்ஜில்லா படத்தில் ராணுவம் காட்ஜில்லாவை துரத்த ஆனால் காட்ஜில்லா ராணுவ தளவாடங்களைச் சுக்குநூறாக்கும் காட்சிகள், மாற்றுப்பாதைகளில் புகுந்து வந்து ராணுவ வண்டிகளை சிதறடிக்கும் காட்சிகள் நினைவுக்கு வருவது என் நினைவுத் திறனை மெச்சிக் கொள்ளத் தோன்றுகிறது. அதே நேரம் சூடு அதிகம் தெரிகிறது. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சுட்ட சூட்டைச் சற்றே குளிர்வித்திருக்கலாம். குளிர் கால ரிலீஸ் என்பதால் சூட்டோடு விட்டுவிட்டார்களோ என்னவோ! சென்னையில் போருரிலும் டி நகரிலும் நடக்கும் இந்தச் சண்டைக் காட்சிகளை திடீரென்று ஆளரவமற்ற ஒரு பகுதிக்குக் கொண்டு போய் ஒரு ஆளில்லா அணு ஆராய்ச்சி மையத்தில் சிட்டிக்கு பேட்டரி டவுன் என்று நிறுத்துகிறார்கள். வில்லப்பறவை அங்கிருக்கும் ஒரு சிக்னல் எமிட்டர் கதிர்களுக்குப் பயந்து பறந்துவிடுகிறது. அந்த இடம் செக்டார் டூ என்று நொய்டா, சண்டிகட் பக்கம் காட்டுகிறார்கள். சைஃபை என்ற விளம்பரத்தோடு வந்தாலும் தமிழ்ச்சினிமா அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

அந்தப் பறவை சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை ஆராய்ந்து அது ஒரு மனிதனின் சக்தி என்று வசீகரன் கண்டுபிடிக்கிறார். அந்த இடம் விண்வெளிக்கு சிக்னல் அனுப்பும் இடம் என்கிறார்கள். The Battleship படம் நினைவுக்கு வருகிறது. பாசிடிவ் சிக்னல் மட்டுமே அனுப்பி விண்வெளியில் உள்ள பாசிடிவ் சக்திகளை மட்டும் பூமியின் பக்கம் ஈர்ப்பதே நோக்கமாம்.  விஞ்ஞானம் பேசுவார்கள் என்று பார்த்தால் ரெய்கி, பிராணிக் ஹீலிங், ஃபெங்ஷுய் வகையறா ஆட்களைப் போல அந்த விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானியைப் பேச வைத்துள்ளார்கள். இந்த பாசிடிவ் நெகடிவ் சக்திகளை மைக்ரோ ஃபோடான் என்று ஒரு பெயர் சொல்லி எமிட்டர் மூலம் பறவையின் எதிர்மறை சக்தியை சமன் செய்ய முடிவெடுக்கிறார் வசீகரன். சிட்டி உதவியுடன் சமன் செய்ய போராடும் போது ஃப்லாஷ்பேக் போட்டு ஏன் இப்படி என்று சொல்கிறார்கள்.

Akshay Kumar, Rajinikanth, and Amy Jackson in 2.0 (2018)
பறவைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒருவர் பறவையியல் பேராசிரியராக இருக்கிறார். பக்ஷிராஜன் என்று பெயர். திருக்கழுகுன்றத்தில் வசிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் ஏதோ மலைப் பிரதேசத்தில் வசிப்பது போல எந்நேரமும் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டே இருக்கிறார். ஆழ்வார் பாசுரத்தில் ஒரு வரி சொல்கிறார். அதையே வைத்து மாணவர்களுக்கு பறவையியல் வகுப்பு நடத்துகிறார். அதிலும் பெரிதாக எந்த விளக்கமோ விவரமோ இல்லை, பாசுரம் குறித்தும் பறவைகள் குறித்தும். சிட்டுக்குருவி வீட்டுக்குள் வரவில்லை, வேடந்தாங்கலுக்குப் பறவைகள் வரவில்லை போன்ற கவலைகளை மாணவர்கள் சொல்லும் போது சோகமாக பேசாமல் இருக்கிறார்.

செல்ஃபோன் வந்த பிறகுதான் பறவைகளின் எண்ணிக்கை குறைகிறது. அதை சரிசெய்ய செல்ஃபோன் டவர்கள் 90%தை ஏறக்கட்ட வேண்டும் என்று செமினார் நடத்துகிறார். செல்ஃபோன் சேவை வழங்கும் கம்பெனி வாசலில் பறவைகளைக் கொல்லாதே என்று அட்டை பிடித்துக் கோஷம் போடுகிறார். செல்ஃபோன் விற்கும் கடை வாசலில் ஒவ்வொரு ஃபோனும் குருவியின் சவப்பெட்டி என்று கூவுகிறார். வியாபாரிகள் இவரைத் துரத்திவிடுகிறார்கள். நிலத்தில் செல்ஃபோன் டவர் வைக்கவிடும் விவசாயியிடம் பறவைகளைக் கொல்பவர்களுக்கு இடம் தருகிறாயே என்று சண்டை போடுகிறார். ஒரு eccentric நிலையில் இருந்தே இந்த விஷயத்தை அணுகியும் பேசியும் வருகிறார். நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அங்கே இவரது வாதங்களுக்கு அறிவியல் பூர்வமான நிரூபணங்களோ, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களோ இல்லை என்று வழக்கில் தோற்கிறார். நம்மாழ்வார் பாசுரத்தின் அதே ஒரு வரியைச் சொல்லியபடி செல்ஃபோன் டவரில் தூக்கில் தொங்கிவிடுகிறார்.

வசனம் எழுதியது மூன்று பேர் (ஜெயமோகன், சங்கர், தொழில்நுட்ப விஷயங்களுக்கு கார்க்கி) என்ற நிலையில் வசன உச்சரிப்பிலாவது ஜெயமோகன் கொஞ்சம் உறுத்துக் காட்டியிருக்கலாம். குறைந்தது அந்த நம்மாழ்வார் பாசுரம் ஒரே ஒருவரி சொல்வதில் மட்டுமாவது டப்பிங் பேசியவரை உச்சரிப்பு விஷயத்தில் வேலை வாங்கியிருக்கலாம்.

இறந்த உடலில் இருந்து நெகடிவ் ஆரா மட்டும் வரும். உயிருடன் இருக்கும் உடல்களில் பாசிடிவ் ஆரா மட்டும் இருக்கும். எதிர்மறை ஆராவை மைக்ரோ ஃபோடான்+ கதிர்களைக் கொண்டு சமன் செய்யலாம், இது விஞ்ஞானம்  என்று சொல்கிறார்கள். அடக்கப்பட்ட ஆவியை (ஆரா) எந்திரன் படத்தில் இறந்துபோன வில்லன் விஞ்ஞானியின் மகன் விஞ்ஞானி திறந்து விடுகிறார். அது வந்து வசீகரனின் உடலில் புகுந்து கொள்கிறது.

செத்தவர்களின் நெகடிவ் ஆரா இப்படி உயிருள்ளவர்களின் உடல்களில் புகுந்துகொள்ள விஞ்ஞான விளக்கம் ஏதும் தருவார்களா என்று பார்த்தால் எருமைப் பால் அடர்த்தி அதிகம்,  கேனின் கீழே இருக்கும்; பசும்பால் அடர்த்தி கம்மி, கேனின் மேலே இருக்கும், ஆக ஒரே கேனில் ரெண்டு பால் என்று கவுண்டமணி முன்பொரு படத்தில் பேசிய விஞ்ஞான ரீதியிலான விளக்கம் கூட தரவில்லை.

இந்நிலையில் டி.நகரில் அந்நியன் படத்தில் அம்பி அந்நியன் மாறி மாறி வரும் காட்சியை வசீகரன் பக்ஷிராஜன் மாறி மாறி வருவது போல வைத்து கொஞ்ச நேரம் ஓட்டுகிறார்கள். சிட்டியை பார்ட் பார்ட்டாகக் கழட்டி வீசுகிறது வசீகரன், பக்ஷிராஜன் கூட்டணி. சிட்டியின் கால்களைப் பிய்த்துப் போட்டு யுவர் கால் இஸ் டிஸ்கனெக்டட் ஹெஹ்ஹெஹ்ஹே என்று மொக்கை போடுகிறார் பக்ஷிராஜன் (ஜெயமோகன்? சங்கர்? கார்க்கி?). நிலா ரோபோ சிட்டி ரோபோவை மறுபடியும் பழைய வில்லத்தனமான ரெட் சிப் வைத்து அசெம்பிள் செய்து ஆக்டிவேட் செய்கிறது. மேலும் பல சிட்டிக்களைச் செய்து எந்திரன் படம் போலவே கும்பலாக சிட்டி ரோபோக்கள் வருகின்றன.

விடுவிக்கப்பட்ட பக்ஷிராஜன் ஆவி(ஆரா) ஒரு ஸ்டேடியத்தில் புகுந்து அங்கிருக்கும் மொத்தப் பேரையும் செல்ஃபோன் ரேடியெஷன் வைத்துக் கொல்லப்போவதாக மிரட்டுகிறது. சாம்பிளுக்கு தன்னை விடுவித்த வில்லனை கொன்றுவிடுகிறது. மற்றவர்களைக் கொல்வதற்குள் சிட்டி அங்கே வந்து சேரந்து வசீகரன் உடலை வெளிப்படுத்தும் பக்ஷிராஜன் ஆவியை (ஆராவை) எந்திரன் படத்தின் மேஏஏஏ மேனரிசத்துடன் எதிர்கொள்கிறது சிட்டி.

அங்கேயும் பக்ஷிராஜனுடன் சண்டை போடும் போது சிட்டிக்கு பேட்டரி போய்விடுகிறது.  இவ்வளவு கோடிகள் செலவு செய்து எடுத்த படத்தில் சிட்டி ரோபோவுக்கு ஒரு ட்யூரசெல் பேட்டரி வாங்கி மாட்டிவிட்டிருக்கலாம். சார்ஜ் கூடக் கொஞ்ச நேரம் வந்திருக்கும். அடுத்த படத்திலாவது சங்கர் யோசிப்பாராக. இல்லை என்றால் கடிகாரங்களுக்கு வருவது போல அணு சக்தி பேட்டரி மாட்டிவிடலாம். கூடங்குள உதயகுமார் கோர்டுக்குப் போகாமலிருக்க வேண்டும்.

3.0 குட்டி என்று ஒரு மினியேச்சர் ரோபோ காட்டுகிறார்கள். புறாக்களின் மீது பறந்து வந்து புறாவைக் கொல்வேன் என்று பக்ஷிராஜனை மிரட்டி சிட்டிக்கு சார்ஜ் போடுகிறது. பிறகு அதுவும் பல மினியேச்சர் ரோபோக்களைக் கூட்டமாகச் சேர்த்துக் கொண்டு செல்ஃபோன் வடிவெடுத்து ப்க்ஷிராஜன் கட்டுப்பாட்டில் உள்ள செல்ஃபோன்களை வெடிக்க வைக்கிறது. சண்டையில் சிட்டி துப்பாக்கியால் சுட பக்ஷிராஜன் ஆவி (ஆரா, ஆரா) வசீகரன் உடலை விட்டுவிடுகிறது. சென்னை ஸ்டேடியத்தில் இருந்து திடீரென்று முன்பு போன செக்டார் டூ போய் பாழடைந்த முன்னாள் அணு உலை, வேற்றுக்கிரகவாசிகளுக்கு சிக்னல் அனுப்பும் இடத்தில் சிட்டி ரோபோ நுழைந்து அங்கிருக்கும் ஆபீசரை அடித்துப் போட்டுவிட்டு பக்ஷிராஜனை அடக்குகிறது.

திரைப்படத்தின் இறுதியில் எழுத்துப்போட்டு முடிப்பதை வசீகரன் அட்வைஸ் செய்யும் காட்சிகளுக்கு நடுவே செய்கிறார்கள். சரி முடிந்தது என்று எழுந்தால் எந்திர லோகத்து சுந்தரியே என்று ஒரு பாட்டுப் போடுகிறார்கள். (எமி ஜாக்சனை ஒரு பாட்டுக்காவது ஆடவிடாமல் விட்டால் எல்லிஸ் டங்கன் குற்றமாகுமோ!?) பிறகு சாவகாசமாக 3.0 குட்டியை வசீகரனுக்கு சுய அறிமுகம் செய்யவைத்து படத்தை முடிக்கிறார்கள், ஒரு வழியாக.

2.0 படத்தில் அந்நியன் படத்தின் தாக்கம் சற்றே தூக்கலாக இருக்கிறது. வேறு சில படங்களின் தாக்கமும் அப்பட்டமாகத் தெரிகிறது. சங்கர் வேறு களம் யோசிக்கலாம் அல்லது அறிவியல் தெரிந்தவர்களைக் கொண்டு கதை செய்யலாம். ஆவி சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் நல்லெண்ணம், நல்ல நோக்கம் எல்லாம் பேசினாலும் நிம்மதி தராது என்பது அடிநாதமாக ஒலிக்கிறது.  நேரடியாகச் சொல்ல முடியாமல் ஆரா பூரா என்று பீலா விட்டிருக்கிறார்கள்.

வைரமுத்து என்று ஒரு மந்திரிக்குப் பெயரிட்டு மலையாள வாடையுடன் தமிழ் பறைய விட்டிருக்கிறார்கள். என்ன கோபமோ? ஆண்டாளுக்கே வெளிச்சம்!! தமிழ் டிவிக்களின் சகலகலா விவாத நிபுணர் மயில்சாமி மந்திரிக்குப் பிஏவாக இந்தப் படத்தில் வருகிறார். அடுத்த படத்தில் மந்திரி பிரமோஷன் கிடைக்க வாழ்த்துக்கள்.

ஆங்காங்கே எடுத்தாண்ட மணிரத்னம் பட வசனம், வடிவேலு காமெடி வசனம் ஆகியவற்றுக்கு ஒரு நன்றி அட்டை காட்டியிருக்கலாம். எழுத்தாவது ஓட்டியிருக்கலாம். சுஜாதா இல்லாத குறை நன்றாகத் தெரிகிறது. திரைக்கதை சுவையற்ற ஜவ்வுமிட்டாய், வசனம் மொக்கை, கதை.... விட்டிருக்கிறார்கள். படமெடுத்த மூன்றாண்டுகளில் நிறைய விடுமுறைகள் எடுத்திருப்பார்கள் போலத் தெரிகிறது. ஆனால் கடந்த இரு பா.ரஞ்சித் குதறல்களை benchmark என்று கொண்டால் ரஜினிக்கு 2.0 வானளாவிய பரவாயில்லை ரகம்.

முதல் பாதி முரட்டு ரசிகர்களுக்கானது. இரண்டாவது பாதி குழந்தை அறிவுடன் பார்த்தால் குதூகலிக்கலாம்.

No comments: