ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Wednesday, 23 October 2013

தங்க வேட்டையும் சோபனச் சாமியாரும்..

உத்திரப் பிரதேசம் உன்னாவ் தங்கவேட்டை புகழ் சுவாமி ஷோபன் சர்க்கார் மோடியைக் கிழி கிழி என்று கிழித்தார் என்று மானாட மயிலாட எஃபெக்டில் பங்களா ஜந்து சொம்புத்திரன் துவங்கி காதவழி பெயரில்லாத சில கழுதைகள் வரை பலர் முகநூலில் ஸ்டேட்டஸ் போட்டு திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியைப் படித்துவிட்டு அதை வைத்து புளகாங்கிதம் எய்தி அந்த மனநிலையிலேயே கருத்துப் பேசுகிறார்களோ என்று தோன்றுகிறது.



முதலில் சில விவரங்களைப் பார்ப்போம். மோடி கூற்றை எதிர்த்துக் கடிதம் எழுதியவர் சுவாமி ஷோபன் சர்கார் அல்ல. அவரது சீடகோடிகள் சேர்ந்து கொண்டு ஓம்ஜி என்பவர் மூலமாக எழுதிய கடிதம் அது. கடிதம் திறந்த கடிதமாகப் பத்திரிகைகளுக்குக் கொடுத்திருப்பது மூலம் அவர்கள் இதை வைத்துப் பிரபலமாக விழைவது புரிகிறது.

கடிதத்தில் கண்டுள்ள பல குற்றச்சாட்டுகள் சற்றே சமீபத்திய வரலாற்றைப் பார்த்தால் சுலபத்தில் பொய்யெனப் புரியும் தன்மையன.

பாஜக ஆட்சியில் கருப்புப்பணத்தை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கிறார்கள் சீடகோடிகள்.

Prevention of Money Laundering Act, 2002 (PMLA) என்பது அண்ணல் அடல் பிஹாரி வாஜ்பாயி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்த போது கருப்புப்பணத்தை வெளுப்பாக்கி அனுபவிப்பதையும் அதைப் பதுக்குவோருக்குக் கடும் தண்டனை தருவதையும் செய்ய இயற்றப்பட்ட சட்டம்.
2005லும் 2009லும் இதற்கு திருத்தங்கள் கொண்டு வந்து நீர்த்துப் போகச் செய்தது காங்கிரசு.

ராமர் பாலம் ராமராலேயே உடைக்கப்பட்டது என்று பத்ம புராணம் கூறுகிறதே, பிறகேன் பாஜக அதை வழிபாட்டுத் தலம் என்று கூறி அரசியல் செய்கிறது என்று சீடகோடிகள் கேட்கின்றனர்.

பத்மபுராணத்தின் அடிப்படையிலான வாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் அவர்களால் வைக்கப்பட்டது.

பத்ம புராணம் என்ன சொல்கிறது பார்ப்போம்.

பத்ம புராணம் ஸ்ருஷ்டி காண்டம் 38.129,130

விபீஷணன் இராமனிடம் கேட்கிறான், “என்னைத் தென்னிலங்கைக்கு மன்னனாக முடிசூட்டியுள்ளீர். உம் ஆணையை ஏற்று நான் அரசாள்வேன். ஆனால் இந்த இராம சேதுவின் வழியே இலங்கைக்கு யாரும் பெரும்படை நடத்தி எளிதில் வரலாம். அப்படி நேருங்கால் நான் என் செய்வேன்?

பத்ம புராணம் ஸ்ருஷ்டி காண்டம் 38.131-132
வீடணனின் கோரிக்கை கேட்ட இராமன் வில்லில் அம்பைப்பூட்டி சேதுவை மூன்றாக்கினார். 1/10 அளவில் அதைச் சேதப்படுத்தி எளிதில் யாரும் காலநடையாக இலங்கையை அடைய முடியாதவாறு செய்தார். அதாவது 100 யோசனை தூரத்துப் பாலத்தை ஆங்காங்கே சிறு சிறு சேதாரங்களை 10 யோசனை தூர அளவுக்கு ஏற்படுத்தினார்.

பத்ம புராணம் ஸ்ருஷ்டி காண்டம் 38.135-136

சிறு சேதங்களை ஏற்படுத்திய அச்சேதுவில் உமா மஹேஸ்வரரை ஆவாஹனம் செய்த இராமன் அவரை வணங்கி வழிபட்டான். பின் இராமேசுவரம் சென்று அங்கே இராமநாதஸ்வாமியைத் தொழுதான். மகிழ்ந்த மஹாதேவர் “இரகுவம்சத்து விளக்கே! உன் வேண்டுகோளுக்கிணங்க நான் இந்தச் சேதுவிலும் இந்தத் தீவிலும் சூரிய சந்திரர் உள்ளவரை குடியிருந்து வணங்குவோருக்கு அருள்பாலிப்பேன்” என்று வரமளித்து அருளினார்.
அவரைப் போற்றி இராமன் பாடிய சுலோகங்கள் 139 முதல் 147 ஆம் பாடல்கள் வரை இருக்கின்றன. 148ஆவது சுலோகம் புலஸ்திய முனிவர் இராமன் பாடிய சுலோகங்களைச் சிலாகித்துப் பாடியது.

149 முதல் 151ஆம் பாடல் வரை மஹேஸ்வரர் கூற்று. “இராமா! இந்தப் புனிதத்தலமாம் சேதுவையும் இராமேஸ்வரத்தீவையும் இந்தக் கடலையும் எவனொருவன் வந்து வணங்குகிறானோ அவன் எப்பேர்ப்பட்ட பாவம் செய்திருந்தாலும் அவை நீங்கப்பெற்று நற்கதி அடைவான். ப்ரம்மஹத்தி முதலான் கொடும்பாவங்களும் இங்கு வந்து வணங்கினால் நீங்கிவிடும் (154).

ஆக இராமர் சேதுவை உடைத்தார் என்று பத்ம புராணத்தில் வரும் ஒரு பகுதியை வைத்துப் பொத்தாம் பொதுவாக நம்புகிறவர்கள் அது புனிதத் தன்மை வாய்ந்தது, பாவங்களைப் போக்கும் சக்தி கொண்டது என்று அதே பத்மபுராணம் கூறும் கருத்தை ஏன் மறுத்து உடைந்த பாலம் எப்படிப் புனிதமாகும் என்று கேட்கிறார்கள்? இது அரைகுறை அறிவு கொண்ட அரசியல்வாதிகள் கேட்டால் கூட ஒப்புக்கொள்ளலாம். உயிர் போனாலும் வாக்குத் தவறக்கூடாது என்ற கொள்கையுடன் வாழும் ரகுவம்சத்து வாரிசுகள் என்று சொல்லிக் கொள்ளும் சுவாமி ஷோபன் சர்க்காரின் சீடகோடிகள் தங்கள் வம்சத்து இராமனின் வாக்கை ஏன் நம்ப மறுக்கிறார்கள்?

போபர்ஸ் ஊழல் வழக்கை கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் குற்றவாளிகளைத் தப்பவிட்டது காங்கிரசு அரசும் அதன் தலைவர் சோனியாவும். பாஜக ஆட்சிக்காலத்தில் முடக்கப்பட்ட குவாட்ரோக்கியின் வங்கிக் கணக்கு காங்கிரசுக் காலத்தில் விடுவிக்கபட்டு பணத்தை அவர் எடுத்துச் செல்ல வழிவகுக்கப்பட்டது.

தேஹ்ரி அணை குறித்த பாஜகவின் கருத்து திரிக்கப்பட்டு காங்கிரசின் பிரச்சாரம் தொனிக்கிறது இவர்களது வாதத்தில். பாஜக அந்த அணை நிலநடுக்கம் வருங்கால் மிகவும் ஆபத்தானது என்று சொன்னது. அக்கருத்து இன்னமும் சரிதான் என்று புவியியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். வெள்ளத்தைத் தடுத்த அணையை நீ எதிர்த்தாயே என்று கேட்பது கேணத்தனமான வாதம்.

மோடியின் பிரச்சாரத்துக்கு பணம் எப்படி வருகிறது என்று கேட்கிறது சிஷ்ய கோடிக்கூட்டம். வருவாய்ப்புலனாய்வு, வருமானவரி, சிபிஐ என்று சகலத்தையும் கையில் வைத்திருக்கும் காங்கிரசு இதை இத்தனை நாட்களாக ஏன் கேட்கவில்லை. இம்மென்றால் ரெய்டுகள் ஏனென்றால் வழக்குகள் என்று முலாயம் மீதும் மாயாவதி மீதும் பாயும் இந்த அமைப்புகள் இதுநாள் வரை மோடியை ஏன் நெருங்கவில்லை?

சரி.. இவர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாமே காங்கிரசு அரசின் அறிக்கைகள், கூச்சல்களாகவே இருக்கின்றதே ஏன் என்று உற்று நோக்கினால் வரும் செய்தி பூனைக்குட்டி யார் வீட்டுக் குட்டி என்று விவரம் வருகிறது.

தி இந்து தமிழ் பத்திரிகை இப்படிச் சொல்கிறது:

சாதுவின் சீடகோடிகளின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர்கள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மாமனாரான கோபிநாத் தீக்ஷித் சாதுவின் முதல் சிஷ்யர். இவர், உபியில் காங்கிரஸ் முதல்வராக என்.டி. திவாரியின் கீழ் உள்துறை அமைச்சராக இருந்தார். இவரது சொந்த ஊர் உன்னாவ். இதே ஊரை சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லாவின் குடும்பம் சாதுவின் ஆஸ்ரமம் சென்று வருகிறது. இப்போது அகழ்வராய்ச்சியின் பெயரில் தங்கப்புதையல் வேட்டை ஆரம்பித்து வைத்த மத்திய இணை அமைச்சர் சரண்தாஸ் மஹந்தும் ஒரு காங்கிரஸ்காரர்தான்.

மோடியை விட அதிகமாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய உணவுத்துறை அமைச்சருமான சரத் பவார், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் சாதுவின் கனவை கண்டித்து கருத்து கூறியிருந்தனர். எனினும், மோடியை மட்டுமே சாது கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
                                                     ============
ஆக, லங்கோடு, குடிசை, செல்போன் தவிர வேறு சொத்தே இல்லாதவர் என்று சொல்லிக் கொள்ளும் இந்த ஷோபன் சர்க்கார் காங்கிரசு சர்க்காரின் கையாள். அவரது சீடகோடிகள்  காங்கிரசுக்கு ஆதரவாக மோடியை எதிர்க்கக் களமிறங்கி இந்து சாமியார் ஒருவர் மோடிக்கு எதிரி என்று காட்ட விழைந்திருக்கிறார்கள். ஆனால் ”சாமியாரை மதிக்கிறேன் என்ற போதும் அரசு கருப்புப்பணம் குறித்து வெள்ளை அறிக்கை தரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்று சொல்லி மோடி இவர்களின் திட்டத்தைத் தவிடு பொடி ஆக்கிவிட்டார்.

வாழ்க ஜனநாயகம். வாழ்க அரசியல். தர்மமே வெல்லும். வந்தே மாதரம்.

1 comment:

Unknown said...

நல்ல article... காங்கிரஸ்காரர்களுக்கு என்ன பண்றதுன்னு புடியவில்லை... ஆதலால் எதை எதையோ அவர்கள் செய்து பார்க்கிறார்கள்... அவை எல்லாம் காமெடியாக தான் முடிகிறது... அவ் வகையில் இதுவும் ஒன்று. தேர்தல் அருகில் வர வர இன்னும் இது போல் பல டிராமாக்களை அரங்கேற்றும்... பார்த்து ரசித்து எதிர்ப்போம்...