ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 24 August 2013

தன் தேசத்தை உயர்த்திக் காட்டுவதே தேசத் தலைமையின் லட்சியம்

தமிழ்த்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை.

உத்தரேத் ஆத்ம நாத்மாநம் நாத்மாநம் அவஸாதயேத் |
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து ராத்மைவ ரிபுராத்மந:

தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன், தனக்குத் தானே பகைவன்.

இது கீதையில் கண்ணன் சொன்னது. கீதை என்பது போர்க்களத்தில் உறவுகளை எதிரே கண்டு துவண்ட பார்த்தனை ”போரிடுவது தீமையை அழிக்கவே! உறவுகள் தீமையின்பாற்பட்டு நின்றால் எதிர்ப்பது கடமையன்றி வேறில்லை” என தெளிவித்துத் தேற்றிய உரை.


அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த நம் தேசம் இன்று நாலாபுறங்களிலும் தாக்கப்படுகிறது. தீமை ஓங்கி உலகளக்க விழைகிறது. ஆனால் தீமையை ஓட்டி நன்மையை நாட்டவேண்டிய கடமை கொண்ட அரசு செயலற்று இருக்கிறது. எதிரிகளோடு நட்பு பாராட்டுபவர்களை என்னென்று கொள்வது?

இராணுவ வீரர்கள் இருவர் தலை கொய்யப்பட்ட போது அழுத கண்ணீர் வற்றிப்போய்த் தேசம் துவண்டுவிட்ட நிலையில் பல நாட்கள் கழித்து பாகிஸ்தானுடன் சுமுக உறவு சாத்தியமில்லை என்று மட்டும் சொன்னார் பிரதமர் மன்மோகன் சிங். பின்னர் அது பற்றி எந்த நடவடிக்கைகளும் இல்லை.



இப்போது நம் இராணுவத்தின் 5 வீரர்கள் பாகிஸ்தான் இராணுவத்தினால் கஷ்மீரில் கொல்லப்பட்டுள்ள நிலையில் தேசம் கொதித்துப் போய் கோபத்தில் உச்சியில் இருக்கிற பொழுதில் பிரதமர் வாய்திறக்கவில்லை. அதாவது பேசவில்லை. சாப்பிடுவது, கொட்டாவி விடுவதெல்லாம் வழக்கம் போலச் செய்வார் என்று நம்பப்படுகிறது.

இராணுவத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் அந்தோணியார் முதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் நம் வீரர்களைக் கொன்றார்கள் என்று அறிவித்தார். அடுத்த அறிக்கை ஒன்று வந்தது. அது முந்தைய அறிக்கைக்கு பதிலி என்றும் தெரிவிக்கப்பட்டது. அதில் பாகிஸ்தான் இராணுவச் சீருடை அணிந்த மர்ம நபர்கள் இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றனர் என்று சொல்லப்பட்டது. முதல் அறிக்கையின் அடிப்படை என்ன? இரண்டாவது பதிலி அறிக்கையின் அடிப்படை என்ன?

இதற்கிடையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஒரு கருத்து முத்தை உதிர்த்திருக்கிறார். “பாகிஸ்தானில் இருந்து புறா ஒன்று கல்லைக் கொண்டு வந்து இந்திய மண்ணில் வீசினால் பாகிஸ்தான் அரசு எப்படிப் பொறுப்பேற்கும்?” என்று கேட்கிறார் குர்ஷித். சமாதானத்துக்குப் பேர் போன பறவை கூடப் பாகிஸ்தானில் இருந்து வந்தால் கல்வீசும் என்று ஒப்புக் கொண்டதற்கு அவருக்கு முதலில் நாம் நன்றி சொல்வோம்.

பாகிஸ்தான் இராணுவச் சீருடை அணிந்த அந்த மர்ம நபர்கள் யார்? அவர்கள் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இல்லை என்றால் ஏன் பாகிஸ்தான் உறவு பற்றிக் கவலைப்படவேண்டும்? அந்த நபர்களைத் தேடி அவர்கள் மீது நமது இராணுவம் பதில் தாக்குதல் நடத்தலாமே? நாடற்ற தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன் இந்திய பாகிஸ்தான் உறவுக்கு இடைஞ்சல் என்றாகிறது?

இதைக் கேட்டால் தேசப்பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொறுப்பாகப் பேசுங்கள் என்கிறார் திக்விஜய்சிங். தேசப்பாதுகாப்பு விஷயங்களில் பொறுப்பற்று இருப்பது யார்? இராணுவ வீரர்கள் செத்து விழுந்த போதும் பாகிஸ்தானுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறது அரசு?

இஷ்ரத் ஜஹான் என்ற லஷ்கர் இயக்கத் தீவிரவாதி கொல்லப்பட்ட போது பிஹாரின் புத்திரி என்று உருகித் தவித்த நிதிஷ்குமார் பிஹாரைச் சேர்ந்த கொல்லப்பட்ட வீரர்களின் உடலைப் பெறவோ இறுதி மரியாதை செலுத்தவோ செல்லவில்லை. ”போலீஸ் இராணுவம் இதிலெல்லாம் சேரும்போதே சாவுக்கு அஞ்சாமல் தானே சேருகிறார்கள்? அப்புறம் ஏன் செத்துப் போனார்களே என்று புலம்புகிறீர்கள்?” என்று பீம்சிங் என்ற பிஹாரின் பஞ்சாயத்து அமைச்சர் பேசியுள்ளார். பிறகு வருத்தம் தெரிவித்தாராம்.

இராணுவ அதிகாரிகள் கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். நம் இராணுவ உயரதிகாரி ஒருவர் கூறுகையில் பாகிஸ்தான் இராணுவத்தின் எல்லை செயல்பாட்டு அணியானது கமாண்டோ படை, குறிப்பிட்ட பகுதியில் உள்ள வீரர்கள், ஜிஹாதி தீவிரவாதிகள் ஆகியோரைக் கொண்ட அணி என்றும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட ஒரு அதிகாரி கஷ்மீர் பகுதியில் இருந்து அரசியல் அழுத்தங்கள் காரணமாக நீக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கிறார். ஆக நம் இராணுவ வீரர்கள் எதிரிகளைச் சுட்டால் நடவடிக்கைக்கு உள்ளாவர், சுடவில்லை என்றால் மரணத்துக்கு ஆளாவர். நமக்காக எல்லையைக் காக்கச் செல்லும் வீரர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை இதுதானா?

இதனிடையே பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபைச் சந்தித்துப் பேசுவார் என்று அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. பேசுவார் என்பதை நம்பமுடியவில்லை என்றாலும் பேச்சுவார்த்தையில் மன்மோகன் சிங் கலந்து கொள்வார் என்பது செய்தி. அது கூடாது என்பதே தேசப்பற்றாளர்களின் எண்ணம்.



அண்ணல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஒரு விஷயம் நடந்தது. முஷரஃப் சர்வாதிகாரியாக இருந்த காலத்தில் பாகிஸ்தானின் ஜனாதிபதியாகத் தன்னை அறிவித்துக் கொள்வதற்கு முதல்நாள் வாஜ்பாயிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தார் முஷரஃப். ”சொல்லுங்கள் மிஸ்டர் பிரசிடெண்ட்”, என்றார் வாஜ்பாய் அவர்கள். ”நான் பாகிஸ்தான் ஜனாதிபதி இல்லை. தலைமை அதிகாரி தான்”, என்றார் முஷரஃப். “நாளை நீங்கள் அறிவிக்கத்தானே போகிறீர்கள், வாழ்த்துக்கள்” என்றார் வாஜ்பாய். அரண்டு போன முஷர்ஃப் முதல் வேலையாக தன் உளவுத்துறையில் சிலரைத் தூக்கியடித்து மாற்றம் செய்தார்.

சிரித்துக் கொண்டே பேசினாலும் எதிரியில் போக்கில் கண்ணாக இருப்பது தலைவனுக்கு அடையாளம். தன் தேசத்தி உயர்த்திக் காட்டுவதே தேசத் தலைமையின் லட்சியம். அத்தகையதொரு தலைமை பொறுப்பேற்கும் வரை தேசப்பற்றாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வந்தே மாதரம்.

No comments: