ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 15 January 2011

வாப்பா குதிருக்குள் இல்லை

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்கள் அந்நாட்டு அரசின் ஆசியோடும் ISIன் துணையோடும் செயல்படுவது உலகறிந்த விஷயம். இதை பாகிஸ்தான் மறுத்து வந்துள்ளது. 26/11 மும்பை தாக்குதல் ஜமாத் உத் தாவா அமைப்பின் ஆசியோடு நடத்தப்பட்டது. நாம் அஜ்மல் கசாபை வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். அவனைத் தூக்கிலிடுங்கள் என்று மும்பை நகரமே கொதித்துப் போய்ச் சொல்லியும் மத்திய அரசு வழக்கம் போல் வெண்டைக் காயை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி வைத்தது போல வழ வழ கொழ கொழ என்று கொள்கை பேசுகிறது.


26/11 தாக்குதலில் கொல்லப்பட்ட யூத ரப்பி கேவ்ரியல் நோவா ஹொல்ட்ஸ்பர்கின் குடும்பத்தார் அமெரிக்காவில் ப்ரூக்ளின் நகர நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். வழக்கை முடிக்க பன்னெடுங்காலம் ஆகலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்த போதும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராடுவோம் என்று உறுதிபடத் தெரிவித்தனர் ஹோல்ட்ஸ்பர்க் குடும்பத்தினர்.

26/11 மும்பை கோரத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பயிற்சி, போக்குவரத்து ஏற்பாடுகள் ஆகிய உதவிகள் செய்தது பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்புகள் என்று ஹோல்ட்ஸ்பர்க் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் ஹஃபீஸ் சயீத், ஜாகியுர் ரஹ்மான் லாக்வி, ISI தலைவர் Lt.Gen.ஷுஜா பாஷா மற்றும் பல பாகிஸ்தானிய அதிகாரிகள், தீவிரவாதத் தலைவர்கள் மீது குற்றம் சுமத்தி விசாரணை கோரியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் $75000 ஒவ்வொரு குற்றத்துக்கும் அபராதமாக செலுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.


ப்ரூக்ளின் நீதிமன்றம் நேரிலோ வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக இவர்களுக்கு அழைப்பாணை அனுப்பியது. அது  குறித்து பல வாக்குவாதங்கள் நடந்தன. அமெரிக்க நீதிமன்றத்தின் அதிகார எல்லை குறித்துப் பேசி நிதி எல்லை காரணமாக நீதிக்குத் தலைவணங்க முடிவெடுத்தது பாகிஸ்தான். ISI தலைவர் மற்றும் அலுவலர்களுக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு வக்கீல் வைத்து வாதாடும் என்று கடந்த டிசம்பர் 31,2010ல் பாகிஸ்தான் சொன்னது.

இப்போது ஹபீஸ் சயீது லாகூர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் ஒரு தொண்டு நிறுவனத் தலைவர் என்றும், அந்த ஜமாத் உத் தாவா நிறுவனத்துக்கும் லஷ்கர் எ தய்யிபா அமைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனாலும் ISI அதிகாரிகளைக் காப்பாற்ற வக்கீல் வைக்கும் பாகிஸ்தான் அரசு தனக்கும் தன்னுடன் சேர்ந்த அடிப்பொடிளுக்கும் வக்கீல் வைத்து வாதாட வேண்டும் என்று மனு செய்துள்ளார்.

ஆனால் பாகிஸ்தான் அரசு இதற்கு மறுக்கிறது. அரசு சாராத தனியார்களை அரசு செலவில் அயல்நாட்டில் வாதாடிக் காப்பாற்றுவது முடியாது என்று பாகிஸ்தான் அரசு சொல்கிறது. உங்கள் அதிகாரிகளைக் காப்பாற்றுவீர்கள் எங்களை மட்டும் கைவிடுவது என்ன நியாயம் என்று ஹ்பீஸ் சயீத் கேட்கிறார். அப்பன் சீ.. வாப்பா குதிருக்குள் இல்லை என்பது போல கதை வருகிறது இப்போது.


கார்கில் போரில் இறந்த தன் அதிகாரபூர்வ இராணுவ வீரர்களையே அடையாளம் தெரியாத பிணங்கள் என்று அழுகவிட்ட பாகிஸ்தான் அரசு தன் செலவில் அதிகாரபூர்வமாக தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவது நடக்குமா? ஹபீஸ் சயீது பாகிஸ்தானில் பெற்றுள்ள செல்வாக்கின் படி நடக்காது என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments: