Saturday, 9 February 2013

காந்திய அஹிம்சை - நிம்மதிக்கான வழி அல்ல

காந்திய அஹிம்சை என்று நாட்டில் இன்று போதிக்கப்படுவதும் அறிவுறுத்தப்படுவதும் துன்பமிகக் கொண்டு உழல்வதே சாலச்சிறந்த மனித வாழ்வு என்றும், குற்றமிழைத்தவனை மீண்டும் மீண்டும் மன்னித்துக் கொண்டேயிருப்பதே சாலச்சிறந்த மனிதத்தன்மை என்பதுமே. சுஹ்ரவர்தி முதலாக இப்படிப் பலரை மன்னித்தே இந்த தேசம் உருப்படாமல் போய்விட்டது. இந்த மீண்டும் மீண்டும் மன்னிப்பு என்ற பெரும்போக்கை முன் மற்றும் வழிமொழிவோரை காந்தியார் ஒரு போதும் மன்னிக்கமாட்டார் என்பது என் எண்ணம்.

டோண்டு ராகவன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பலரும் பதிவுகள் போட்டிருக்கிறார்கள். அதில் புகழ்ந்தும் பாராட்டியும் பலர்.  அவரைப் பிடிக்காது எனினும் இரங்கல் தெரிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் சிலர். போலி டோண்டு விஷயத்தில் அவர் செயல்பாடுகள் குறித்துப் பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் அவரைப் பிடிக்காது என்போர் கூட போலி டோண்டு செய்தது குற்றம் என்று ஒப்புக் கொள்கிறார்கள். 

வழமையான ”இதைப் பெரிதுபடுத்தாமல் விட்டிருக்கலாம். இறைவன் பார்த்துக் கொள்வான். சாக்கடை மீது கல்லெறியாதீர்கள் என்ற அறிவுரைகளோடு  மறப்போம் மன்னிப்போம், பகைவனுக்கருள்வாய்” என்ற உரைநடைகளையே  பலரும் சொல்கிறார்கள்.

ஆனால் டோண்டு ராகவன் இரங்கல் பதிவில் வந்து துளசிதளத்தில் திரு. குலசேகரன் இதைக் கொஞ்சம் அதிகமாகவே செய்திருந்தார். முதலில் இரங்கல் தெரிவிக்கும் இடத்தில் வந்து பழைய பகையைக் கிளறி அதில் நடந்து கொண்ட விதம் பற்றி ஆராய்வது முறையல்ல. நடந்து முடிந்த ஒரு விஷயத்தை முழுமையாக ஆராயாமல் சரிதான் மன்னித்துவிட்டு போங்கள் என்று பேசுவதும் சரியல்ல. அவன் தவறு செய்தாலும் அதற்கு ஒரு வகையில் கொஞ்சமாவது நீங்களும் காரணம் அதனால் அவனை மன்னித்துவிடுங்கள் என்று பேசுகிறார். எந்த க் காரணங்களால் இந்த முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை.

நான் ஸ்ரீரங்கம் ப்ராமணாள் கபே விஷயத்தில் பதிவெழுதி எதிர்வினையாற்றிய போது இப்படித்தான் வந்து வேதாந்திக்கு உபதேசிக்கப்பட்ட விஷயங்களைச் சொல்லி நான் அவற்றைத் தான் கடைப்பிடிக்கவேண்டும் என்றார். நான் வேதாந்தி கிடையாது.  ஒரு வேதாந்தி இப்படி தாக்கீது இல்லாமல் ஆஜராகி அறிவுரை சொல்லவும் மாட்டார். ஆகவே இவர் சொல்லும்படி செய்பவர் இல்லை என்பது தீர்ந்து போன விஷயம். இப்படிப்பட்டவர்களை ஆங்கிலத்தில் pacifist என்று பொதுவாக அழைப்பார்கள். அமைதிவாதி என்று தமிழில் சொல்லலாம். ஆனால் இவர்களின் செயல்பாடுகள் தேவையற்ற பெரும்போக்கைக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல.

ஒரு பிரச்சினை என்று வந்தால் இரு தரப்பையும் விசாரித்து தவறு இருக்கும் தரப்பைக் கண்டித்தோ தண்டித்தோ செய்து பாதிக்கப்பட்ட தரப்புக்கு இனி பிரச்சினைகள் வராது என்று நம்பிக்கை ஊட்டுவது நீதியின் பாற்பட்ட செயல். ஆனால் இப்போது வலம் வரும் அமைதிவாதிகள் பலரும் இரு தரப்பிலும் பிரச்சினை இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அதனால் இருவரும் ஒருவருக்கொருவர் மன்னித்துவிடும்படி பேசுவார்கள். இருவர் மீதும் எப்படித் தப்பு என்று கேட்டால் “பிரச்சினை வேண்டாம்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறே” என்று பாதிக்கப்பட்டவர் மீது சண்டைக்காரன் என்று பழி சுமத்துவார்கள்.



தின்ன வரும்புலி தன்னையு மன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!  

- மஹாகவி பரதியார்.

இது போன்ற செய்யுட்களை வைத்துக் கொண்டு காலக்ஷேபம் நடத்தும் அமைதிவாதிகளுக்கு என்னிடம் பல கேள்விகள் உள்ளன, நிற்க.


பகைவனுக்கு அருள்வது என்பது பகைவன் என்று நாம் ஒருவரைக் கருதி அவரும் நாமும் தத்தம் நிலைப்பாடுகளில் இருந்து இறங்கி வரும் போது இருவராலும் நடத்தப்பட வேண்டியது.

இங்கே பகைவன் என்ற போலி டோண்டு ஏதோ தெரியாமல் தவறு செய்த குழந்தையல்ல. திட்டமிட்டுப் பழகி அன்பு காட்டுவது போல நடித்து அதைக் கொண்டு ஒருவரை நயவஞ்சகமாய் வீழ்த்த முயன்றிருக்கிறார். டோண்டுவைப் பிடிக்கவில்லை என்றால் இந்த ஆண்மகன் அவரோடு நேரடியாகப் பொருதியிருக்க வேண்டும். போலித்தனங்களின் பின்னே ஒளிந்து கொண்டு நயவஞ்சகம் செய்வது தவறோ பிழையோ அல்ல ”எல்லஞ்சரித்தான்” என்று மன்னிப்பதற்கு. அது குற்றம்.

ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தோரைப் பிடிக்கவில்லை என்றால் ஏன் என்று காரணம் சொல்லி அதனால் விலகியிருக்கிறேன் என்று போகலாம், அல்லது கருத்து மோதல்களில் ஈடுபட்டு தம் நிலையை நாட்டலாம். அது கற்றுத் தெளிந்த மாந்தர் கைக்கொள்ளும் வழி. உன்னைப் பிடிக்கவில்லை என்பதால் உன்னையும் உன்னைச் சேர்ந்தவர்களையும் எப்பாடு பட்டாவது கேவலப்படுத்துவேன், ஒழிப்பேன் என்று இறங்குவதும் அதற்கு நயவஞ்சகம் செய்வதும் சந்தேகத்தின் பலனை அளித்து மன்னிப்பதற்கான செயல் அல்ல.

சிரித்துப்பேசி அன்புடன் பழகுவது போல நடித்துப் பலர் காரணம் புரியாது வேதனை அனுபவிக்கத் திட்டமிட்டு வேலை செய்த ஒரு மனிதன் சக மனிதர்களின் நம்பிக்கைக்குத் தகுதி அற்றவன். அவனை மன்னிப்பதற்கும் மன்னிக்காது விட்டு விலகிப் போவதற்கும் அந்த மனிதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அதிகாரமும் உரிமையும் உள்ளது,

அவன் வெறுப்புக் கொண்டு செயல்பட்டான் என்றால் நீங்கள் வெறுப்புக் கொள்ளும்படி சற்றேனும் இருப்பதும் தானே காரணம் என்று, கேட்பது நீ முகம் கைகால்களைக் காட்டுவதால் தானே பாலியல் வன்முறை நடக்கிறது. தலையிலிருந்து கால் வரை முட்டாக்கு போட்டுக் கொள் என்று பெண்ணுக்குச் சொல்வது போல இருக்கிறது.

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே!  

-மஹாகவி பாரதியார்.

மறப்பதும் மன்னிப்பதும் செய்யாத வாழ்க்கை முழுமை பெறாது என்கிறார் குலசேகரன். டோண்டு அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு யாம் கிப்பூர் பதிவு மூலம் சமாதானம் பேச இறங்கி வந்தார். ஆனால் நடந்தது என்ன? சமாதானத்தைக் கையாலகாத்தனம் என்று எண்ணிய போலி டோண்டு  பிரச்சினையை வெவ்வேறு காரணங்கள்  காட்டி வளர்த்தார்.

சமாதானம் பேச வந்த போதும் சண்டைக்கு நின்ற ஒருமனிதனை மன்னிப்பதும் ஏற்பதும் ஒவ்வாத விஷயம். இதெல்லாம் தெரிந்துமே  நீங்களும் காரணமாயிருக்க வாய்ப்பிருக்கிறது என்று கருத இடமிருப்பதால் மன்னிப்பதே சிறப்பு என்று பெரும்போக்குக் காட்டுகிறாரா குலசேகரன் என்று தெரியவில்லை.  சில சமயங்களில் சண்டைக்காரர்களோடு சேர்த்துப் பெரும்போக்காளர்களையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

முடிந்து போன பிரச்சினையை நீ ஏன் கிளறுகிறாய் என்று என் மீது பாயத்தயாராகும் யாருக்கும் ஒரு சொல். நான் கிளறவில்லை. கிளறிவிட்டுப் பெரும்போக்குக் காட்டும் மனிதருக்கு பதில் மட்டுமே சொல்கிறேன்.

1 comment:

  1. This is the best homage I read for Mr.Dondu. I appreciate your sincerity. Well written with apt references and proof.

    ReplyDelete

சொல்லுங்க!