ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Wednesday 10 September 2014

ஓம் சக்தி - கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையை உடையவராயிருக்கலாம். அதாவது, மற்ற எல்லாரையும் விட ஒரு நியாயம் அல்லது ஒரு தர்மம் அல்லது ஒரு மதம் இவற்றில் ஒன்றில் ஒருவன் விசேஷ மனப் பற்றுடையவனாய் இருக்கலாம். இவை ஒவ்வொன்றும் ஸர்வ ஸம்மதமாய் நன்மை பயக்கத் தக்கதாய் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு கொள்கை தீமையை விளையச் செய்யினும் செய்யும். ஆனால், ஒருவர் ஒரு கொள்கைப்படி கருமங்களைச் செய்யும் பொழுது அது தனக்காகவது பிறருக்காகவது நன்மை தருமென்றே செய்வார்.


ஒருவன் கொடுங்கோல் அரசில் குடித்தனம் செய்தால் வயிற்றுக்குச் சோறில்லாமலும் சர்க்கார் அதிகாரிகளின் ஹிம்சையால் மானமிழந்தும் துன்பமடைய வேண்டியிருக்கிறது; குடியானவனாயிருந்து பயிர்த்தொழில் செய்யவோ அநேக தடங்கல்கள் இருக்கின்றன; பட்டத்தில் மழை பெய்யவில்லை;அப்படி மழை பெய்தாலும், உழ எருதுகள் இல்லை; உழுதாலும், விதைக்க வித்துக்களில்லை; விதை விதைத்தாலும்,களைகளைச் சரியான காலத்தில் எடுத்துப் பயிர் அடித்துக் காவல் காத்து மாசூலை அறுவடை செய்து வீடு கொண்டுவந்து சேர்த்து ஸூகிக்க ஐவேஜி இல்லை; அப்படி வீடு கொண்டு வந்து சேர்த்துப் பலனை அநுபவிக்கவும் இடமில்லை; ஏனென்றால் சர்க்கார் தீர்வைக்கே தானிய தவசங்களைக் களத்தில் விற்றுவிட வேண்டியிருக்கிறது. ஆகையால், உழுது உண்ணுவதைவிட வேறு என்ன தொழில் செய்தாயினும் பிழைக்கலாமென்று "கொள்ளைக்கூட்டத்தோடு சேர்ந்து பிரயாணிகளை வழிப்பறி செய்தோ, கன்னம் வைத்துத் திருடியோ பிழைக்க ஆரம்பிக்கிறான்.

அவன் செய்யும்தொழில் ஒரு கொள்கையினடியாய் உண்டானதாயினும், அது அவனுக்குத்தான் நன்மை தருமேயல்லாது இதரர்களுக்குத் தீமையே செய்யும். இருந்தாலும், ஆபத் தர்மம் என்ற கொள்கையை அவன் அனுசரிக்கிறான் மனைவி மக்கள்உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றிப் பார்த்தவரெல்லாம்பரிதாபங் கொள்ளும்படியாய், ஒரு புருஷன் குடும்ப சவரக்ஷனை செய்தால், அவன் மானம் அழிந்து போகிறது.'பயிர்த் தொழிலில் ஒன்றும் கிடைக்காது' என்ற நிச்சயம் ஏற்பட்டு விட்டது. திருட்டுத் தொழிலில் ஏதேனும் பசியாரஉண்ணக் கிடைக்கும் என்ற திண்ணம் உண்டு. பிரயாணிகளோஆங்கிலேயர் ஆசீர்வாதத்தால் நிராயுதபாணிகளாய் இருக்கிறார்கள். போலீஸ் என்ற உள் நாட்டுக் காவற்காரரோ சம்பளம் சொற்பமானதாலும், அந்நியர் அரசாட்சி தங்கள் தயவின்றி நடவாதென்ற நம்பிக்கையாலும், தாங்களே திருடத் தயாராயிருக்கிறார்கள். கொள்ளைக் கூட்டத்தாரோடு 'எக்கிரிமெண்டு' (உடன்படிக்கை) செய்து கொண்டு அவர் கொள்ளையில் ஒரு பங்கு பெற்றுக் காலத்தைத் தள்ளக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தியாதி சவுகரியங்களால் திருட்டுப் பிழைப்பே மேலானதென்று ஒரு குடியானவன்அதைக் கைக் கொள்ளுகிறான். ஆனால், அந்தத் தொழிலில் ஜீவஹிம்ஸை செய்தே நடக்க வேண்டியிருக்கிறது. அப்படிச்செய்வது பாபமாகும். அந்தப் பாபத்தால் பாபத்திற்குரிய மோட்சத் தடை நேரிடும் என்ற பயமோ, சந்தேகமோஅவனுக்கு உண்டாகிறது. அதற்கு ஈடாக அவன் வழிப்பறி செய்யுங்காலத்தில் ஒரு தருமத்தை அனுசரிக்கிறான். அதாவது, சில வகுப்பார்களை அவன் தொடுவதில்லை.ஏழைகள், துணையின்றிச் செல்லும் ஸ்திரீகள் நோயாளிகள், தூர ஸ்தலங்களிலிருந்து வரும் யாத்திரைக்காரர்கள் ஆகியஇவர்களையும் இவர்களைப் போன்ற மற்றவர்களையும் ஹிம்ஸிப்பதில்லை.

அதோடு நில்லாமல், தான் கொள்ளையடித்து ஈட்டிய பொருளில் ஒரு பாகத்தைக் கொண்டு தான தருமங்களும் செய்கிறான். தன்னைப் பகலில் கொள்ளையடித்த "சாவுகாரனையும், லேவாதேவி செய்யும் நிஷ்கண்டகனையும், ஏன் இரவிற் கொள்ளையடிக்கக் கூடாதென்று தன்னைத்தானே கேட்கிறான். 'குனிந்தால் வரி, நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நில வரி, நீர் வரி, பாசி வரி, ரோட்டு வரி, காட்டு வரி, வீட்டு வரி, மோட்டு வரி, கொடுக்கல் வரி, வாங்கல் வரி, வருமான வரி, தொழில் வரி, தோல்கேட்டு (Toll Gate) வரி, ரயில் வரி, சாக்கடை வரி, சாராயக்கடை வரி, மாட்டு வரி, ஆட்டுவரி, நாய் வரி, பூனை வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, - இன்னும் எண்ண முடியாத வரிகளைப் போட்டு, வீடு வாசல், நிலம் கரை, ஆடு - மாடு, சட்டி பொட்டி இவைகளை ஜப்தி செய்து ஏலங்கூறி கொள்ளையடித்துப் போகும் சர்க்கார் பணத்தை நாம் ஏன் திரும்பக் கொள்ளையடிக்கப் படாது?' என்ற கேள்வியும் அவனுக்கு உண்டாகிறது.

இவ்விதமாக ஆட்சேபணை ஸமாதானங்களால் தம் மனதில் கொள்ளையடித்துப் பிழைப்பதே நல்லதென்று ஒரு தீர்மானம் செய்து கொள்கிறான். இந்தத் தீர்மானம் அவன் பிறவிக் குணத்துக்கு விரோதமாய் இருப்பினும், தர்ம சாஸ்திரத்திற்கு முற்றும் ஒவ்வாததாய் இருப்பினும், காலசுபாவம் என்ற அவசியத்தால்ஆபத் தர்மமாக அவன் சித்தத்தில் நிலைத்து விடுகிறது. இதை ஒரு கொள்கையாக வைத்துக்கொண்டு அவன் காரியங்களை ஆரம்பிக்கிறான். சிலர் இதை நல்லதென்று சொல்லுவார்கள். எவர் எதைச் சொல்லினும், எவர் எதைச் செய்யினும், தான் கொண்டதே கொள்கையென்று அவன் காலத்தைக் கழித்துவருகிறான். அவன் கொள்கைக்கும் செய்கைக்கும் ஒற்றுமை இருக்கிறது. இரண்டும் ஒன்றையொன்று அடுத்துத் தொடர்ந்தே வருகிறது. அவன் மனோதிடம் வாய்ந்த புருஷன் என்றே சொல்லலாம்.

- பாரதியார்.